வேலூர் மாவட்டம், காட்பாடி விருதம்பட்டு பகுதியில் ஏப்ரல் 2ந்தேதி இரவு, மாவட்ட கண்காணிப்பாளர் பிரவேஷ் குமார் உத்தவுப்படி, காட்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் துரைபாண்டி உட்பட அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, வேலூரில் இருந்து மேற்கு வங்க மாநில பதிவு எண் கொண்ட ஆம்புலன்ஸ் சித்தூரை நோக்கி சென்றது. அந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் வட மாநிலத்தைச் சேர்ந்த 6 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
அவர்கள் அனைவரும் வட மாநிலத்திலிருந்து வேலூர் சி.எம்.சி. மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த நோயாளிகளுடன் வந்த உறவினர்கள் என விசாரணையில் தெரியவந்தது. அவர்களில் வேலூர் காகிதப் பட்டறையில் உள்ள எம்.எஸ்.ஆர். ரெசிடென்சியில் இருவரும், பாபுராவ் தெருவில் உள்ள ஸ்ரீதர் ரெசிடென்சியில் நான்கு பேரும் தங்கியிருந்தோம் எனக்கூறியுள்ளனர். ஊரடங்கு உத்தரவால் தங்களால் இங்கே இருக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் இங்கிருந்து செல்ல முடிவு செய்தோம் எனக் கூறினர்.
அப்போது சி.எம்.சி. வெளியே உலாவும் புரோக்கர்கள் தலைக்கு இருபதாயிரம் தந்தால் உங்கள் மாநிலத்தில் கொண்டும் போய்விட ஏற்பாடு செய்கிறோம் எனச்சொல்லி பேரம் பேசி சரிக்கட்டியுள்ளார்கள். அவர்களும் பணம் தந்து இப்படி பயணம் செய்ய முற்பட்டோம் எனச்சொல்லியுள்ளார்கள். இங்கிருந்து சென்றாலும் வழியில் பல சோதனை சாவடிகள் உள்ளன. அதனால் நீங்கள் இங்கிருந்து செல்வது என்பது சாத்தியமற்றது எனக்கூறிய அதிகாரிகள், அவர்களை எச்சரித்து திரும்பவும் அவர்கள் தங்கியிருந்த விடுதிக்கே செல்ல வேண்டும் என்றனர்.
அவர்களை போலீஸ் பாதுகாப்புடன் விடுதிக்கு அனுப்பிவைத்தவர்கள் ஊரடங்கு உத்தரவை திரும்பப் பெற்ற பின் நீங்கள் செல்லுங்கள் என்றும், வேறு ஏதாவது உதவி தேவை இருந்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள உதவி எண்ணில் உள்ள அதிகாரிகளை தொடர்பு கொள்ளுமாறு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
இவர்கள் போலி வாகன பதிவு எண் கொண்ட ஆம்புலன்ஸில் தங்களது மாநிலத்துக்கு செல்ல முயன்றது விசாரணையில் தெரிய வந்தது. போலி பதிவு எண் கொண்ட அந்த ஆம்புலன்ஸ் யாருடையது என்றும், இங்கிருந்து செல்ல முயன்றவர்கள் உண்மையில் மருத்துவமனைக்குதான் வந்தார்களா என்றும் விசாரணை நடத்திவருகின்றனர். மாவட்ட கண்காணிப்பாளர் பிரவேஷ் குமார் உத்தரவின் பேரில் அந்த வாகனத்தை பறிமுதல் செய்து விருதம்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.