நெய்வேலி என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்கு நிலம் கையகப்படுத்துவது குறித்த கருத்துக்கேட்புக் கூட்டத்திற்கு இரு பாமக எம்எல்ஏக்கள் தலைமையில் பாமகவினர் சிதம்பரம் நகருக்கு திங்கட்கிழமை வருகை தந்தனர். இதனையடுத்து விழுப்புரம் டிஐஜி பாண்டியன் மேற்பார்வையில் கடலூர் மாவட்ட எஸ்பி ஆர்.ராஜாராம் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர்.
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்கு நிலம் கையகப்படுத்துவது குறித்த விவசாயிகள் கருத்துக்கேட்புக் கூட்டம் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் சிதம்பரத்தில் திங்கட்கிழமை நடைபெறுவதாக இருந்தது. இந்தக் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பாமக எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்று நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக இருந்தது. இதனை முன்னிட்டு சிதம்பரம் உதவி ஆட்சியர் அலுவலகம், பொதுப்பணித்துறை வீராணம் விடுதி உள்ளிட்ட பகுதிகளில் விழுப்புரம் டிஐஜி பாண்டியன் மேற்பார்வையில் கடலூர் மாவட்ட எஸ்பி ஆர்.ராஜாராம் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்நிலையில், கடலூர் வெடி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்க அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் சென்றுவிட்டதால் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறவில்லை. கருத்துக் கேட்புக் கூட்டத்திற்கு வருகை தந்த மயிலம் சட்டப்பேரவை உறுப்பினர் சி.சிவகுமார், மேட்டூர் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.சதாசிவம், பாமக மாநில துணைத்தலைவர் விஎம்எஸ். சந்திர பாண்டியன், மாவட்டச் செயலாளர் சன்.முத்துகிருஷ்ணன் (கடலூர் கிழக்கு), செல்வ மகேஷ் (கடலூர் தெற்கு), ஜெகன் ( கடலூர் வடக்கு), மாநில செயற்குழு உறுப்பினர் சஞ்சீவி, மாவட்டத் தலைவர்கள் தேவதாஸ் படையாண்டவர், தட்சிணாமூர்த்தி, அன்புமணி தம்பிகள் படை மாவட்டச் செயலாளர் செல்வ பிரதீஷ், நகர செயலாளர் திலீப்ராஜன் சிதம்பரம் வடக்குவீதி தனியார் மண்டபத்தில் ஆலோசனை நடத்தினர். ஆலோசனைக்கு பின்னர் பாமக எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் சிதம்பரம் உதவி ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று, உதவி ஆட்சியர் சுவேதாசுமனை சந்தித்து தங்களது கருத்தை தெரிவித்துவிட்டு, பின்பு கடலூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிடுவதாகக் கூறி அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
பின்னர் சட்டப்பேரவை உறுப்பினர்கள் சி.சிவக்குமார் (மயிலம்), எஸ்.சதாசிவம் (மேட்டூர்) ஆகியோர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: "ரகசிய கருத்துக் கேட்புக் கூட்டத்தை எவ்வித அறிவிப்பும் இல்லாமல் திடீரென ரத்து செய்துள்ளனர். இரு சட்டமன்ற உறுப்பினர்கள் விவசாயிகளின் சார்பாக கருத்தை பதிவு செய்ய இங்கு வருகை தந்துள்ளோம். தொடர்ந்து ரகசியக் கூட்டம் என்ற பெயரில் விவசாயிகளின் நிலத்தை கையகப்படுத்த அமைச்சர் தலைமையிலேயே கூட்டம் நடைபெற்று வருகிறது. கூட்டம் எங்கு நடந்தாலும் அனைத்து தரப்பு மக்களின் கருத்துக்களைக் கேட்டு தான் முடிவு எடுக்க வேண்டும். இதுபோன்று ரகசியமாகக் கூட்டத்தை நடத்துவது சட்டத்திற்கு புறம்பானது. நெய்வேலியில் இனி ஒரு பிடி மண்ணை கூட கையகப்படுத்த அனுமதிக்க மாட்டோம்.
விவசாயிகளின் எதிர்ப்பை மீறி நிலம் கையகப்படுத்தும் பணியை தொடங்கினால் மக்களை திரட்டி மக்கள் இயக்கப் போராட்டம் நடத்தப்படும். மத்திய அரசுக்கு ஆதரவாக தமிழக அரசு நிலத்தை கையகப்படுத்தி கொடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன்னர் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இதுவரை முறையான இழப்பீடு வழங்கப்படவில்லை. மாற்று இடம் வழங்கப்பட்ட ஏழை பொதுமக்களுக்கும் பட்டா வழங்கப்படவில்லை. என்.எல்.சி நிறுவனம் மக்களை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. தற்போதைய நெய்வேலி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தண்ணீரின் நிறம் மாறி குடிநீருக்கே பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் 25 ஆயிரம் ஏக்கர் நிலத்தை கையகப்படுத்துவதால் இப்பகுதியில் உள்ள விவசாயம் முற்றிலுமாக அழிந்து விடும். தற்பொழுது தமிழகத்தில் தானியப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் இது போன்ற விவசாய நிலங்களை கையகப்படுத்துவதால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். எனவே மத்திய அரசு நிலத்தை கையகப்படுத்தும் முடிவை கைவிட வேண்டும். தமிழக முதல்வர் இந்த பிரச்சனையில் தலையிட்டு விவசாயிகளுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும். நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் மூன்றாம் அலகு விரிவாக்கத்திற்காக விவசாயிகளின் விளைநிலத்தை கையகப்படுத்துவதை பா.ம.க ஒருபோதும் அனுமதிக்காது" என்றனர்.