Skip to main content

முகமூடி கொள்ளையர் அட்டகாசம்: பேராவூரணி மக்கள் பீதி

Published on 04/01/2018 | Edited on 04/01/2018

முகமூடி கொள்ளையர் அட்டகாசம்: 
பேராவூரணி மக்கள் பீதி

பேராவூரணி கடைவீதியில் கடைகளின் பூட்டை உடைத்து முகமூடி அணிந்த மர்ம நபர்கள் ரூ 1 இலட்சம் பணத்தை திருடிச் சென்றுள்ளனர். புகாரின் பேரில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி புதிய பேருந்து நிலையம் அருகே மளிகைக்கடை நடத்தி வருபவர் எஸ்.கே.எம்.காசியார் (வயது 55).  முன்னாள் பேரூராட்சி உறுப்பினரான, இவர் வணிகர் நலச்சங்கத்தில் நிர்வாகியாக உள்ளார். இவர் வழக்கம்போல  புதன்கிழமை இரவு 11மணிக்கு  தனது கடையை மூடிவிட்டு வீடு சென்றுள்ளார். 

நேற்று வியாழக்கிழமை காலை கடையை திறக்க வந்தபோது,இரவில்  கடையின் பூட்டை உடைத்து, ஷட்டரை திறந்து கடையின் உள்ளே புகுந்த மர்மநபர், கல்லாப்பெட்டியில் இருந்த ரூ 55 ஆயிரத்தை களவாடி சென்றது தெரியவந்தது. இதே கடை எதிரில் மளிகைக்கடை வைத்துள்ள இக்பால் என்பவரது கடையிலும் ரூ 3 ஆயிரத்து 500 களவாடப்பட்டுள்ளது. இதையடுத்து அருகில் உள்ள சேகர் என்பவரது நோட்-புக் விற்கும் ஸ்டேசனரி கடையிலும் பூட்டை உடைக்க முயற்சி நடந்துள்ளது.

மேலும் ஒரு கிலோமீட்டர் தொலைவில் சேதுசாலையில் உள்ள பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள சாகுல்கமீது என்பவருக்கு சொந்தமான மளிகைக்கடையில் பூட்டை உடைத்து ரூ 50 ஆயிரம் களவாடப்பட்டுள்ளது. தலையில் பனிகுல்லா, கையில் (க்ளவுஸ்) கையுறை அணிந்த மர்மநபர் கல்லாப்பெட்டியில் இருந்து பணத்தை திருடிச் செல்வது, கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. 

இச்சம்பவம் குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
 
வர்த்தக சங்கம், வணிகர் நலச் சங்கம் கோரிக்கை : பேராவூரணி கடைவீதியில் அடுத்தடுத்து ஒரே இரவில் கடைகளில் நடந்துள்ள திருட்டு சம்பவம் வர்த்தகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எனவே போதிய காவலர்களை நியமித்து கடைவீதியில் பாதுகாப்பை ஏற்படுத்தவும், குற்றவாளியை கைதுசெய்து திருட்டு போன பணத்தை மீட்டுத்தரவேண்டும் எனவும் வியாபாரிகள் சங்கம்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

    - இரா.பகத்சிங்

சார்ந்த செய்திகள்