பிக்பாஸ் நிகழ்ச்சியால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பில்லை: உயர்நீதிமன்றம்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் குடும்பத்தினருடன் பார்க்க முடியாத அளவுக்கு ஆபாசம் நிறைந்து இருப்பதாகவும், சமுதாயத்தில் அடித்தட்டு மக்களின் மனதை புண்படுத்தும் படியான 'சேரி பிகேவியர்' போன்ற சொற்களை உபயோகித்து வருகின்றனர்.
எனவே இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்கக்கோரி மத்திய, மாநில அரசுக்கும், காவல்துறை டி.ஜி.பி.க்கும் மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இந்த நிகழ்ச்சியை தடை செய்ய அவர்களுக்கு உத்தரவிடக்கோரி
சென்னை உயர்நீதிமன்றத்தில் நங்கநல்லூரை சேர்ந்ந சரவணன் என்பவர் மனு தாக்கல் செய்திருந்நார்.
இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது கமல் தரப்பில், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை கண்காணிக்க மத்திய அரசுடன் சேர்ந்து செயல்படும் பிசிசிசி என்கிற அமைப்பு இருப்பதாகவும், நிகழ்ச்சிகள் குறித்து மக்கள் அளிக்கும் புகாரை ஆய்வு செய்து அந்த நிகழ்ச்சிக்கு தடை விதிப்பது மட்டுமல்லாமல் சம்பந்தப்பட்ட தொலைகாட்சிக்கு அபராதம் விதிக்கும் அதிகாரம் பிசிசிசி-க்கு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் இந்த நிகழ்ச்சியால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பில்லை என்றும் அதனால் தமிழக அரசை இந்த வழக்கில் எதிர்மனுதாரராக சேர்த்தது தவறு என்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பல பேர் பார்த்து வருவதாகவும் இது விளம்பரத்திற்காக தொடரப்பட்ட வழக்கு என்றும் தெரிவித்தார்.
இதற்கு, தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளை அரசின் கண்காணிப்பு குழு கண்காணிக்க வேண்டுமா? அல்லது பிசிசிசி கண்காணிக்க வேண்டுமா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இதுகுறித்து ஒருவார காலத்திற்குள் மத்திய அரசு விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளனர்.
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தாங்கள் பார்ப்பதில்லை என தலைமை நீதிபதி மற்றும் நீதிபதி சுந்தர் ஆகியோர் கருத்து தெரிவித்தனர்.
-சி.ஜீவா பாரதி