
கன்னியாகுமரியில் போலீசாரின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு கார், பைக் எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தின் கிராமப் பகுதியான புதன்சந்தை அருகே இருக்கக்கூடிய, சாலை வசதி கூட சரியாக இல்லாத, இடைக்கோடு பகுதியில் களியக்காவிளை காவல் நிலையத்தின் சிறப்பு எஸ்.ஐ செலின்குமார் வசித்துவருகிறார். இந்நிலையில், நேற்று (02.07.2021) இரவு 2.40 மணி அளவில் வந்த இரண்டு இளைஞர்கள் அங்கிருந்த சி.சி.டி.வி கேமராக்களைத் திருப்பி வைத்துவிட்டு எஸ்.ஐ நிறுத்தியிருந்த கார் மற்றும் பைக் மீது பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர்.
சத்தம் கேட்டு வெளியே வந்த செலின்குமார் பக்கத்தில் உள்ளவர்களை உதவிக்கு அழைக்க, குழித்துறை தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து தீ அணைக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தில் கார் மற்றும் பைக் முழுவதுமாக எரிந்து நாசமாகின. ஏற்கனவே ஒரு மாதத்திற்கு முன்பு இதே எஸ்.ஐ வீட்டிலிருந்த வளர்ப்பு நாய் ஒன்று நள்ளிரவில் விஷம் வைத்துக் கொல்லப்பட்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், சிறப்பு உதவி ஆய்வாளர் வீட்டிலேயே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.