கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன மாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை வயது 46. இவர் கடந்த 2005ஆம் ஆண்டு வயல் வெளிக்கு சென்றுள்ளார். அப்போது துரைசாமி என்பவரது மோட்டார் பம்பு செட்டில் இருந்து குடிப்பதற்காக குடத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார் அதே ஊரைச் சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க இளம்பெண்.
தனிமையில் அந்த பெண் தண்ணீர் குடத்துடன் வருவதைக்கண்ட ஏழுமலை அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாக அருகில் இருந்த காட்டுக்குள் தூக்கிச்சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்து மக்கள் ஓடிச் சென்றனர். அப்போது ஏழுமலை, மக்களை பார்த்ததும் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில், ஏழுமலை மீது புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏழுமலையை கைது செய்து சிறையில் அடைத்தனர். அது சம்பந்தமான வழக்கு விசாரணை விழுப்புரம் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று நீதிபதி சாந்தி, இந்த வழக்கில் தீர்ப்பு அளித்தார். அதில், குற்றவாளி ஏழுமலைக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்தார். அந்த அபராதத் தொகையை இழப்பீடாக பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறியுள்ளார். இந்த வழக்கில் அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞராக ராதிகா செந்தில் ஆஜராகி திறமையாக வாதாடி உள்ளார். இளம் பெண்ணை வன்கொடுமை செய்த குற்றத்திற்காக 5 ஆண்டு சிறைத்தண்டனை பெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.