சீன பால் பொருட்களுக்கு நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு பால் முகவர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் விடுத்துள்ள அறிக்கை:
’’கடந்த 2008ம் ஆண்டு சீனாவில் ஆயிரக்கணக்கான குழந்தைகளின் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு டயாலிசிஸ் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் நடந்ததைத் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் சீனாவில் தயாராகும் பால் மற்றும் பாலில் இருந்து தயாரிக்கப்படும் பால் பொருட்களில் "மெலமைன்" என்கிற நச்சுப் பொருள் கலக்கப்பட்டிருப்பதும், அந்த ரசாயனம் கலக்கப்பட்ட பால், பால் சார்ந்த இனிப்பு பொருட்களை சாப்பிட்ட சுமார் 53ஆயிரம் குழந்தைகளின் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டது.
"பிளாஸ்டிக் மற்றும் உரங்களில் கலக்கப்படும்" வேதிப் பொருளான "மெலமைன்" கலக்கப்பட்ட பால் மற்றும் பால் சார்ந்த இனிப்பு வகைகளை உட்கொள்ளும் குழந்தைகளின் சிறுநீரகம் கடுமையாக பாதிக்கப்பட்டு, அவை செயலிழந்து போய் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் சீனாவின் பால் மற்றும் பால் பொருட்களை இந்தியாவிற்கு இறக்குமதி செய்ய 2008ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 3மாதங்களுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டதோடு அதனை உடனடியாக அமுலுக்கு கொண்டு வருவதாக "மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின், அயலுறவு வர்த்தக பொது இயக்குனரகம் (DGFT) சார்பில் விடுத்த செய்திக் குறிப்பில் அப்போது தெரிவிக்கப்பட்டது.
அதன் பின்னர் சீன பால் பொருட்கள் மீதான தடையானது அவ்வப்போது குறிப்பிட்ட கால இடைவெளியில் மத்திய அரசால் நீட்டிக்கப்பட்டு வந்தது. கடைசியாக ஜூன் 2018 வரை சீன பால் பொருட்களை இந்தியாவிற்கு இறக்குமதி செய்ய தடை நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த தடையை மேலும் 6மாத காலத்திற்கு அதாவது 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் 23ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிற தகவல் "இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையத்தின் 13.06.2018 தேதியிட்ட கடிதம்" வாயிலாக தெரிய வருகிறது.
உயிருக்கு தீங்கிழைக்கும் சீன பால் பொருட்கள் மீதான தடையை நீட்டித்து உத்தரவிட்டுள்ள மத்திய அரசின் உத்தரவை "தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்" சார்பில் மனதார வரவேற்கிறோம்.
மேலும் ஆண்டுக்கு சுமார் 150கோடி டன் பால் உற்பத்தி செய்து பால் உற்பத்தியில் உலகில் இந்தியா அசைக்க முடியாத முதலிடத்தில் இருக்கும் போது சீன பால் பொருட்கள் மீதான தடையை அவ்வப்போது கால நீட்டிப்பு செய்யாமல் இந்தியாவில் இறக்குமதி செய்ய நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும் என மத்திய அரசையும், பாரத பிரதமர் அவர்களையும், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் அவர்களையும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம்.’’