சேலம் பெரியார் பல்கலையில் நிதி மோசடி புகாரின் பேரில் கல்வியியல் துறை பேராசிரியர் நாச்சிமுத்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சேலம் பெரியார் பல்கலையில் கல்வியியல் துறை பேராசிரியராகப் பணியாற்றி வருபவர் நாச்சிமுத்து. இவர் மீது நிதி மோசடி, பணியில் கவனமின்மை, கற்பித்தல் பணிகள் மேற்கொள்ளாதது உள்ளிட்ட புகார்கள் கிளம்பின. இதுகுறித்து பல்கலை நிர்வாகம் நடத்திய முதல்கட்ட விசாரணையில், அவர் மீதான புகார்களில் முகாந்திரம் இருப்பது ஊர்ஜிதமானது.
இதையடுத்து பேராசிரியர் நாச்சிமுத்துவை பணியிடை நீக்கம் செய்து 'நிரந்தர பொறுப்பு' பதிவாளர் தங்கவேல் உத்தரவிட்டார். இதுகுறித்து பல்கலை நிர்வாகம் தரப்பில் கேட்டபோது, “பேராசிரியர் நாச்சிமுத்து மீது மோசடி புகார்கள் உள்ளிட்ட வேறு சில புகார்களும் உள்ளன. அவர் மீதான புகார் குறித்து விசாரிக்க ஒரு நபர் குழு அமைக்கப்படும். இக்குழுவின் விசாரணைக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். விசாரணை அறிக்கையின் அடிப்படையில் அவர் மீது இறுதிக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர். பேராசிரியர் நாச்சிமுத்து, நடப்பு ஆகஸ்ட் 25ம் தேதியுடன் பணி நிறைவு பெற இருந்த நிலையில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருப்பது பல்கலை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.