தந்தை பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, மூட நம்பிக்கைகளுக்கு எதிரான பகுத்தறிவுக் கருத்துக்களைப் பரப்பியவர் அறிஞர் அண்ணா. அவரது கவிதைகளும், மேடைப் பேச்சுகளும் பகுத்தறிவுக் கொள்கையினைப் பறைசாற்றுவதாகவே அமைந்தன. ஆரிய- திராவிடப் பகைமை குறித்து அண்ணா இயற்றிய பாடல் ஒன்றின் சில வரிகள் இவை ஒன்றே குலமென்றோம் நாம் ஒருவனே தேவனென்றோம். ஓங்கார மூர்த்திக் கன்று ஒய்யாரமில்லையென்றோம். ஆங்கார ஆரியர் அலைந்து திரிந்தவர்கள் ஆபாச நியதிகள் அவர்வாழப் புகுத்தினார். தெய்வம், கடவுள் குறித்து அண்ணா எழுதிய கவிதை இதோ- மதவெறியரைத் தள்ளி எறி மனசாட்சியே உன் தெய்வம்! உழைப்பை மதி ஊருக்குதவு உனக்கு எட்டாத கடவுளைப் பற்றிப் பிதற்றாதே! சிந்தனை செய்! செயலாற்று!
அண்ணாவின் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்த எம்.ஜி.ஆர்., அவர் பெயரிலேயே கட்சி தொடங்கினார்;‘வாழ்க அண்ணா நாமம்!’என்றார். ஜெயலலிதாவும், அண்ணாவின் நாமத்தைப் போற்றுபவராகவே இருந்தார். 1969, பிப்ரவரி 3-ஆம் தேதி அண்ணா இயற்கை எய்தினார்.
அவரது நினைவு நாளான, வரும் பிப்ரவரி 3- ஆம் தேதி, தமிழகம் முழுவதும் கோவில்களில் சிறப்பு வழிபாடும் பொது விருந்தும் நடத்துவதாக அறிவித்து அழைப்பிதழ் அனுப்பி வருகிறது, தமிழக அரசு. இதனை இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் கண்டித்துள்ளார்.
‘மனசாட்சியே உன் தெய்வம்’என்று உறுதிபடச் சொன்ன அண்ணாவுக்காக, அவரது நினைவு நாளில் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்துகிறது, அதிமுக அரசு.