Skip to main content

“மலம் கலந்தது நீங்கள் தானா..? எங்களையே மிரட்டுறாங்க..” - வேங்கைவயல் மக்கள் அச்சம்

Published on 13/02/2023 | Edited on 13/02/2023

 

People of Vengaivayal complained to the District Collector

 

“குடிநீரில் மலம் கலந்தது நீங்கள் தானா? எனக் கேட்டு எங்களையே போலீசார் ஒத்துக்க சொல்றாங்க...” என்று வேங்கைவயல் கிராம மக்கள் ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

 

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள பட்டியலின மக்களின் பயன்பாட்டிற்காக உள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் மனித கழிவு கலந்திருப்பது கடந்த டிசம்பர் 26ந் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது. இந்த நிலையில் தனிப்படை போலிசார் விசாரணை நடத்திக் கொண்டிருந்தனர்.

 

இந்த விசாரணையில் பாதிக்கப்பட்ட மக்கள் மீதே பழி போட நினைக்கிறார்கள். அதனால் விசாரணை குழுவை மாற்ற வேண்டும் என்று சிபிஎம் உள்பட பலரும் கோரிக்கை வைத்த நிலையில், விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி போலீசார் விசாரணை கடந்த ஒரு மாதமாக நடந்து வரும் நிலையில், திங்கள் கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த வேங்கைவயல் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் ஒரு மனு கொடுத்துள்ளனர்.

 

அந்த மனுவில், குடிநீரில் மலம் கலந்த சம்பவம் குறித்து கனகராஜ் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் வெள்ளனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில், தனிப்படை போலீசார் பாதிக்கப்பட்ட எங்கள் தரப்பினர் மீதே குற்றம் சொல்லியபடி விசாரணை சென்றது. அதன் பிறகு சிபிசிஐடி விசாரணையிலும் எங்கள் கிராமத்தில் குடிநீரால் பாதிக்கப்பட்ட பகுதியைச் சேர்ந்தவர்களிடமே விசாரணை செய்தனர். பிறகு நீங்கள் தான் குடிநீரில் மலம் கலந்ததாக ஒத்துக்கொள்ளுங்கள் என்று மிரட்டி வருகின்றனர். இதனால் அச்சமாக உள்ளது. ஆகவே, தமிழ்நாடு முதலமைச்சர் விசாரணை செய்து உண்மை குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

 

போலீசார் தரப்பிலோ ஏற்கனவே விசாரணை செய்த போதும் விசாரணை அதிகாரிகளை மாற்ற வேண்டும் என்றார்கள். இப்போது சிபிசிஐடி விசாரணையும் சரியில்லை என்கிறார்கள். ஆனால், விசாரணை நேர்மையாகத்தான் செல்கிறது. எதற்காக இப்படி புகார் கொடுக்கிறார்கள் என்பது தெரியவில்லை என்கின்றனர்.

 

குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த கயவர்களைக் கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் ஒத்த கருத்தாக உள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்