சிதம்பரம் அருகே கொள்ளிடம் பாலத்தில் வல்லம்படுகை முதல் புளியங்குடி வரை உள்ள தீத்துக்குடி,கருப்பூர், நளன்புத்தூர், முள்ளங்குடி, கீழபருத்திகுடி, மேலபருத்திககுடி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் செல்லும் பாதையான கொள்ளிடம் இடது கரை சாலை சிதிலமடைந்து போக்குவரத்திற்கு லாய்கற்று உள்ளது. இதனால் பொதுமக்கள் சாலையில் விழுந்து படுகாயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். இதுகுறித்து கடந்த பல ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் போராட்டம் நடத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் திங்களன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கோ.மாதவன் தலைமையில் கொள்ளிடம் பாலம் அருகே சிதம்பரம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தரையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தரமான தார் சாலை அமைத்துத் தரவேண்டும் என்று கோஷங்களை எழுப்பினார்கள்.
இதனால் தேசிய நெடுஞ்சாலையில் 40 நிமிடத்திற்கு மேலாகப் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி, டி.எஸ்.பி ரமேஷ் ராஜ், பொதுப்பணித்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்திக் கலைந்து போகச் செய்தனர். இதனையடுத்து நடந்த பேச்சுவார்த்தையில் இந்தச் சாலை அமைக்க ரூ. 19 கோடி தேவைப்படுவதால் இதற்கான திட்ட மதிப்பீடு மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையின் பேரில் கனிமவள திட்ட நிதியைக் கொண்டு சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறினார்கள்.
இந்த மறியல் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உதயகுமார், ராமச்சந்திரன், குமராட்சி ஒன்றிய செயலாளர் மனோகரன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் மாசிலாமணி, ஜெயக்குமார் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்து கொண்டனர்.