
கடலூர் மாவட்டம், நல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது சேப்பாக்கம் கிராமம். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி வேப்பூர் அருகில் உள்ள இந்த ஊரில் சுகாதார வளாகம் (கழிப்பறை) கட்டப்பட்டுள்ளது. ஆனால், இது ஆண்டுக்கணக்கில் பயன்பாட்டுக்கு வராமல் பூட்டப்பட்டு கிடந்துள்ளது. தற்போது கரோனா நோய் பரவல் இரண்டாவது அலையின் காரணமாக பலதரப்பட்ட மக்களிடம் தொற்று ஏற்பட்டு பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கிராமப்புறங்களில் திறந்தவெளியில் பொதுமக்கள் தங்கள் இயற்கை உபாதையைக் கழிப்பதால் நோய் பரவல் ஏற்படும். இதனால் சுகாதாரக் கேடு நேரும், நோய் பரவல் உண்டாகும் என்பதைக் கருத்தில்கொண்டு மத்திய, மாநில அரசுகள் ஒவ்வொரு கிராமத்திலும் குறிப்பாக, பெண்களுக்கு சுகாதார வளாகம் கட்டிக்கொடுத்துள்ளது. அது பல கிராமங்களில் பயன்பாட்டுக்கு வராமலும் உள்ளது. பயன்பாட்டுக்கு வந்த சுகாதார வளாகங்களில் தண்ணீர் பற்றாக்குறையாலும் போதிய பராமரிப்பு இன்மையாலும் மிகவும் சீர்கெட்டு கிடக்கின்றன.
இந்த நிலையில், நல்லூர் கிராம மகளிர் சுகாதார வளாகத்தைப் பெண்கள் பயன்பாட்டிற்கு உதவும் வகையில் நேற்று (16.05.2021) அந்தக் கிராம ஊராட்சி செயலாளர் சரவணன் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் அந்த வளாகத்தை திறந்து சுத்தம் செய்துகொண்டிருந்தனர். திடீரென்று அந்தக் கிராமத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்கள் சுகாதார வளாகம் முன்பு திரண்டு வந்து சுகாதார வளாகத்தை மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கக் கூடாது என்று தடுத்து நிறுத்தியுள்ளனர்.
சுகாதார வளாகம் திறப்பது நல்ல செயல்தானே. இதையேன் பொது மக்கள் தடுத்து நிறுத்த வேண்டும் என அதுகுறித்து தகவலறிந்த ஊராட்சி ஒன்றிய ஆணையர் தாமரை செல்வன், சம்பவ இடத்திற்கு விரைந்து அக்கிராம பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பொதுமக்கள் தரப்பில், “இந்த சுகாதார வளாகத்தைச் சுற்றிலும் குடியிருப்பு வீடுகள் உள்ளன. சுகாதார வளாகத்தைப் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் இதன் மூலம் இப்பகுதியில் துர்நாற்றம் வீசும். இதனால் பொதுமக்களுக்கு நோய் பரவல் உண்டாகும். எனவே, சுகாதார வளாகத்தை திறக்கக் கூடாது. மீறி திறந்தால் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்று கூறியுள்ளனர். இதையடுத்து நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் அந்தச் மகளிர் சுகாதார வளாகத்தை மீண்டும் பூட்டு போட்டு பூட்டிவிட்டு சென்றுவிட்டனர்.