தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் அதற்கான கொண்டாட்டத்திற்காக மக்கள் தற்போதே தயாராகி வருகின்றனர். விடுமுறை நாளான இன்று தங்களுக்குத் தேவையான புத்தாடைகள் உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்காகக் கடைவீதிகளில் குவிந்தனர். குறிப்பாக மதுரையிலும் கோவையிலும் அதேபோல் தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்காகக் கடைவீதிகளில் குவிந்தனர்.
மதுரையில் தொன்மைவாய்ந்த விளக்குத்தூண் தெற்குமாசி வீதி பகுதியில் இன்று பொதுமக்கள் அதிகமாகப் பொருட்கள் வாங்க குவிந்தனர். இதனால் கடைவீதிகளில் சிசிடிவி கேமராக்கள் மூலம் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் தொழில் நகரமான கோவையில் காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் இன்று அதிகப்படியான மக்கள் தீபாவளி பொருட்கள், உடைகள் போன்றவற்றை வாங்குவதற்காகக் குவிந்தனர்.
கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்பொழுது கரோனா கட்டுப்பாடுகள் அதிகமாக இருந்த நிலையில், இந்த முறை பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாகக் கடைகள் திறந்திருக்கும் நேரத்தில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் பெருநகர வீதிகளில் தீபாவளி பொருட்களை வாங்க பொதுமக்கள் கூடியுள்ளனர்.