ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 22 ந் தேதி திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் டி.ஆர்.ஓ சந்தோஷினி சந்திரா தலைமையில் நடந்தது. அப்போது ஈரோடு கவுண்டச்சிபாளையம் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் பலர் அவர்களுடைய ஆதார் கார்டை அரசிடம் திருப்பி ஒப்படைப்பதற்காக கையில் எடுத்து வந்தனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.
அவர்கள் மனுகொடுத்து விட்டு கூறும்போது, "நாங்கள் 40 வருடங்களாக வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறோம். பல வருடங்களாக இலவச வீட்டுமனை பட்டா கேட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தோம். இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை.மேலும் எங்கள் ஊரில் தனிநபர் ஒருவர் நத்தம் புறம்போக்கு நிலம் 5 ஏக்கரை ஆக்கிரமித்து வைத்துள்ளார். இது சம்பந்தமாக பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளோம். அந்த தனிநபர் ஆக்கிரமித்துள்ள இடத்தை அவரிடமிருந்து மீட்டெடுத்து குடியிருக்க நிலமில்லாத எங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.
அந்த கிராம மக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உங்கள் கோரிக்கை குறித்து உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். அதனை ஏற்று கிராம மக்கள் தங்களது ஆதாரை திரும்பக் கொண்டு சென்றனர்.