பெஹ்லு கானின் கொலை விசாரணை ஒரு ஏமாற்று வேலை: பாப்புலர் ஃப்ரண்ட்
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தில் பசு குண்டர்களால் அடித்து படுகொலை செய்யப்பட்ட பால் விவசாயி பெஹ்லு கானின் படுகொலை தொடர்பாக நடைபெற்று வரும் ராஜஸ்தான் CB-CID விசாரணை வெறும் ஏமாற்று வேலை என்பது நிரூபணமாகியுள்ளது என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் E.அபுபக்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மரண படுக்கையில் இருந்தபொழுது காவல்துறையிடம் பெஹ்லு கான் அளித்த மரண வாக்கு மூலத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஆறு நபர்களுடைய பெயர்கள் வழக்கில் இருந்து ஒருதலைப்பட்சமாக விலக்கப்பட்டிருக்கின்றது. ஒட்டுமொத்த தேசமும் வெட்கி தலைகுனிய காரணமாக இருந்த இந்த மனிதாபிமானமற்ற படுகொலையை தேசத்தின் மக்கள் இன்னும் மறக்கவில்லை.
தலைமறைவான குற்றவாளிகளின் பெயர்களை பாதிக்கப்பட்டவரே குறிப்பிட்டிருக்கும் பொழுது விசாரணை அதிகாரிகள் நீக்கியுள்ளது, சட்ட ரீதியான வழிமுறை மூலம் நீதி கிடைக்கும் என்ற மக்களின் நம்பிக்கையை தகர்த்துள்ளது. இத்தகைய வெளிப்படையான சீரழிவு நிலைகளை எதிர்த்து கேள்விகேட்காமல் அப்படியே விட்டு விடக்கூடாது.
அவர்களுடைய அரசியல் தலைவர்களுக்கு சேவை செய்வதையே நோக்கமாக கொண்டிருக்கும் இத்தகைய பொறுப்பற்ற அதிகாரிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.
தற்போதைய விசாரணை குழுவை உடனடியாக மாற்ற வேண்டும். மேலும், இந்த வழக்கை பாரபட்சமற்ற அதிகாரிகள் அடங்கிய குழுவிற்கு மாற்ற வேண்டும் என்று E.அபுபக்கர் கோரிக்கை விடுத்துள்ளார். அதே போன்று குற்றவியல் நீதி அமைப்பின் இத்தகைய வீழ்ச்சிக்கு எதிராக குரல் எழுப்ப மனசாட்சி உள்ள அனைத்து மக்களும் முன்வர வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.