விவசாயிகளின் போராட்டத்தில் பங்கேற்பு: வேல்முருகன் அறிவிப்பு

விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு விடிவு வேண்டி ஆகஸ்ட் 16ல் மாவட்டத் தலைநகரங்களில் நடைபெறும் அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி பங்கேற்கும் என்று அக்கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக விவசாயிகளின் பிரச்சனைகள் இன்று ஓர் உச்ச கட்டத்தையே எட்டியுள்ளது எனலாம்.
கடந்த ஆறாண்டு காலத்தில் விவசாயத்தின் உயிராதாரமான நீராதாரமே கேள்விக்குறியாயிற்று.
குறிப்பாக கர்நாடகம் தரவேண்டிய காவிரி நீரைத் தரவில்லை. அதனால் ஆண்டுதோறும் ஜூன் 12ந் தேதி திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை திறக்கப்படவில்லை.
உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தும், காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் நீர் பகிர்வு ஒழுங்காற்றுக் குழுவை நடுவண் பாஜக மோடி அரசு அமைக்காததே இதற்குக் காரணம்.
இதனால் குறுவை, சம்பா, தாளடி என எப்போகமுமே இல்லாமல் போய் விவசாயமே பொய்த்தது போல் ஆகிவிட்டது. கூடவே வரலாறு காணாத வறட்சி வேறு.
இந்நிலையில் கருகும் பயிரைக் காணச் சகிக்காமலும் பெருகும் வட்டிக் கடனை அடைக்க முடியாமலும் பல நூறு விவசாயிகள் சாவைத் தழுவிக் கொண்டனர்.
எஞ்சிய விவசாயிகள் இன்றுவரை வாழ்வுக்கான தங்களது போராட்டத்தைத் தொடர்கின்றனர்.
வங்கிக் கடன் உட்பட அனைத்து விவசாயக் கடன்களையும் தள்ளுபடிச் செய்யச் சொன்னது உயர் நீதிமன்றம். ஆனால் அதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்று தடை வாங்கியிருக்கிறது எடப்பாடியின் அதிமுக அம்மா அரசு.
வறட்சி நிதியாக நடுவண் அரசிடம் கோரிய தொகை சுமார் 38 ஆயிரம் கோடி. ஆனால் வழங்கப்பட்டதோ சுமார் 2 ஆயிரம் கோடி.
இந்த நிலையில் மீத்தேன், ஹைட்ரோகார்பன், ஷேல் போன்ற வேதி எரிபொருட்கள் எடுக்கும் திட்டங்களைத் திணித்து விவசாயத் தொழிலையே அழித்துவிடும் காரியத்தில் முனைப்பு காட்டுகிறது நடுவண் அரசு. அதற்குத் துணைபோகிறது எடுபிடியாகச் செயல்படும் எடப்பாடி அரசு.
இதனால் நெடுவாசலிலும் கதிராமங்கலத்திலும் மாதக்கணக்கில் போராட்டம் தொடர்கிறது.
இந்தப் போராட்டங்களுக்குக் குரல் கொடுத்த பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேர் மீது பொய்வழக்குப் போட்டு சிறையில் அடைத்த எடப்பாடி அரசு, அவர்கள் ஜாமீன் பெறவும் தடுத்தது. ஒருவழியாக இப்போதுதான் அவர்களுக்கு ஜாமீன் கிடைத்திருக்கிறது.
நெடுவாசல், கதிராமங்கலம் போராட்டங்களுக்கு ஆதரவாக துண்டு பிரசுரம் விநியோகித்த சேலம் பெரியார் பல்கலைக்கழக மாணவி வளர்மதியை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்திருக்கிறது எடப்பாடி அரசு.
மோடி அரசு இயக்குவதற்கிணங்கியே இதையெல்லாம் செய்கிறது எடப்பாடி அரசு.
மேலும் நினைக்கவே பயங்கரமாகத் தோன்றும் விதத்தில் கடலூர் மற்றும் நாகை மாவட்டங்களில் சுமார் 58,000 ஏக்கர் பரப்பில் பெட்ரோலிய மண்டலம் அமைக்கவும் முடிவு செய்திருக்கிறது மோடி அரசு. இதற்கும் எடப்பாடி அரசு ஒப்புதல் வழங்கிவிட்டது.
இது விவசாயமே செய்யாதபடி காவிரி பாசனப் பகுதி மாவட்டங்களின் நிலத்தை மலட்டு நிலமாக்கும் வஞ்சகச் செயலாகும்.
இப்படியொரு இக்கட்டான நிலைமையில்தான் விவசாயிகளின் பிரச்சனைகளைத் தீர்க்கக் கோரியும் அவர்களின் உரிமைகளை நிலைநாட்டிடவும் ஆகஸ்ட் 16ந் தேதியன்று மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.
பாஜக, அதிமுக கட்சிகள் தவிர மற்ற அனைத்துக் கட்சிகள், விவசாய சங்கங்கள் மற்றும் ஆதரவு அமைப்புகள் நடத்தும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி பெருந்திரளான தொண்டர்களுடனும் மாணவர், இளைஞர் மற்றும் மகளிருடன் களமிறங்குகிறது.
இயற்கை நீர்வள பாதுகாப்பு இயக்கம் கோருகிறபடி விவசாயிகளின் முழுக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.
காவேரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும்.
கரும்புக்கு டன் ஒன்றுக்கு 4,000 ரூபாய் கொள்முதல் விலை தர வேண்டும்.
கரும்பு விவசாயிகளுக்குத் தர வேண்டிய நிலுவைத் தொகையை முழுமையாக வழங்க வேண்டும்.
காவிரி பாசனப் பகுதியை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 16ல் மாவட்ட தலைநகரங்களில் ஆட்சியர் அலுவலகங்கள் முன் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி, இதில் ஒட்டுமொத்த தமிழக மக்களின் பேராதரவையும் வேண்டுகிறது. இவ்வாறு கூறியுள்ளார்.