ஊரடங்கை மே மாதம் 3-ந் தேதி வரை நீட்டிருந்தாலும் ஏப்ரல் 20-க்கு பிறகு பல்வேறு துறைகளுக்குத் தளர்வு செய்யப்பட்டிருக்கிறது. இதனால், ஊரடங்கில் சில மாற்றங்கள் நடக்கவிருக்கின்றன. இந்த நிலையில், மத்திய அமைச்சர்கள் எல்லோரும் அலுவலகம் வர வேண்டும் எனவும், அலுவலகத்தில் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து பணியாற்ற வேண்டும் எனவும் உத்தரவிட்டிருக்கிறார் பிரதமர் மோடி.
இதில், பாஜக உள்பட அதன் தோழமைக் கட்சிகளின் அமைச்சர்கள் பலரும் நாடாளுமன்ற வளாகத்தில் நுழைய யோசிக்கிறார்களாம். கரோனா அச்சம்தான் இதற்குக் காரணம். அதனால், 'ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கும் மே 3 -ந்தேதி வரை வீட்டிலிருந்தபடியே இயங்குகிறோம்' எனப் பிரதமர் அலுவலகத்துக்குத் தகவல் தந்துள்ளனர்.
அமைச்சர்களின் இந்தக் கோரிக்கை , பிரதமர் மோடியின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது. ஆனால், அவரோ விலக்கு அளிக்க மறுத்து விட்டாராம். இதனையடுத்து, "உங்களின் கோரிக்கையைப் பிரதமர் நிராகரித்து விட்டார் " எனச் சம்மந்தப்பட்ட அமைச்சர்களுக்குத் தெரிவித்துள்ளதாம் பிரதமர் அலுவலகம்.