Skip to main content

நிரம்பி வழியும் நீர் நிலைகள்... 'ரெட் அலர்ட்' வாபஸ்!

Published on 19/11/2021 | Edited on 19/11/2021

 

 Overflowing water levels ... 'Red Alert' back

 

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் அணைகள், ஏரிகள் நிரம்பி வழிகின்றன. வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடந்துவருவதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதிகாலை 3 - 4 மணி அளவிலிருந்து புதுச்சேரி - சென்னை இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலம் முழுமையாகக் கரையைக் கடந்துவருகிறது. இதனால் அதிகபட்சமாகப் புதுச்சேரியில் 19 சென்டிமீட்டர் மழையும், கடலூரில் 14 சென்டிமீட்டர் மழையும் பதிவானதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகப் பிறப்பிக்கப்பட்ட அனைத்து சிவப்பு எச்சரிக்கைகளையும் வாபஸ் பெறுவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதேவேளையில் இன்று (19.11.2021) ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையிலிருந்து 40 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டதால் தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குளிக்க, ஆற்றைக் கடக்க, துணி துவைக்க, கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்ல என எதற்கும் ஆற்று பகுதிகளுக்குச் செல்லக் கூடாது என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மாதனூர் - உள்ளி இடையே உள்ள தரைப்பாலம் வெள்ளத்தில் முற்றிலுமாக மூழ்கியது. இதனால் குடியாத்தம் செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் சாலமேடு - திருப்பாச்சனூர் இடையே செல்லும் தரைப் பாலமும் தண்ணீரில் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

 

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நாராயணபுரம் அருகே கொற்றலை ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கியுள்ளது. பிச்சாட்டூர் அணையிலிருந்து ஆரணி ஆற்றில் 6 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் காளகஸ்தி சாலை மூடப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பேட்டை அருகே உள்ள அணைக்கட்டு தடுப்பணை முழுவதுமாக நிரம்பியது. அணைக்கட்டு தடுப்பணைக்கு வரும் 98.154 கனஅடி தண்ணீர் அப்படியே பாலாற்றில் வெளியேற்றப்படுகிறது. சென்னையை ஒட்டியுள்ள செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறப்பு 500 கனஅடியாக குறைந்துள்ளது. 3,500  கனஅடி நீர் திறக்கப்பட்டுவந்த நிலையில், தற்போது நீர் வரத்து 2,700 கனஅடியாக உள்ளதால் நீர் திறப்பு 500 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் புழல் ஏரியில் நீர் திறப்பு 2,500 கனஅடியிலிருந்து 500 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 22 சுரங்கப் பாதைகளும் பயன்பாட்டில் உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்