அடிக்கும் சராசரி வெயிலின் அளவு 105 டிகிரி சென்டிகிரேடையும் தாண்டிவிட்டது தேர்தல் களமான ஓட்டப்பிடாரம். மேலேயும் இல்லாமல் கீழேயும் விழாமல் அந்தரத்தில் தொங்குகின்ற திரிசங்கு நிலை என்பார்களே அது போன்ற பரிதாப நிலையிலிருக்கிறது சுயநலமற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களை உலகுக்கு தாரை வார்த்த ஒட்டப்பிடார பூமி.
அ.தி.மு.க தரப்பில் ஒ.பி.எஸ்., இ.பி.எஸ். போன்றவர்களும், தி.மு.க.வின் ஸ்டாலின், அ.ம.மு.க.வின் டி.டி.வி.தினகரன் போன்ற தலைவர்கள் தங்களது முதல் ரவுண்ட் பிரச்சாரத்தை முடித்துவிட்டனர். ஆளும் இலைத் தரப்பு ஒட்டப்பிடார இடைத்தேர்தலை தங்களது பிராண மூச்சாக பார்க்கிறது. கடந்த தேர்தலில் 453 வாக்குகளில் வெற்றிவாய்ப்பை நூலிழையில் பறிகொடுத்த தி.மு.க.வோ எந்த வகையிலாவது கைப்பற்றிட வேண்டுமென்று குருசேத்திர யுத்தமே நடத்துகிறது. அ.தி.மு.க.வின் தரப்பில் எட்டு அமைச்சர்கள் முக்கிய புள்ளிகள் அவர்களின் ஆதரவாளர்களோடு பிரச்சார முற்றுகையில் இருக்கிறார்கள். அமைப்பாகச் செயல்படும் இவர்கள் தூத்துக்குடியிலிருக்கும் ஸ்டார் ஹோட்டல்களில் தங்கியவாறு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால் ஒட்டப்பிடாரத்தின் நிலை என்ன? சுதந்திரம் அடைந்தது முதல் இன்று வரை தொகுதிக்கென்று அத்தியாவசியத் தேவையான மருத்துவம், குடி தண்ணீர் போன்ற திட்டங்கள் கொண்டு வரப்படவில்லை. தனியார் மற்றும் அரசியல் புள்ளிகளால் அங்குள்ள நிலத்தடி நீர் ஆழ்குழாய் மூலம் எடுக்கப்பட்டு வியாபாராமாக்கப்படுவதால் நிலத்தடி நீர் 1000 அடிகளுக்கும் கீழ் போய்விட்டது என்கிறார்கள்.
முறையான குடி தண்ணீர் வசதி கிடையாது தெருவோரப் பம்ப்களில் அதற்காகத் தவமிருக்கிறோம். முக்கியத் தேவைக்கான மருத்துவ வசதிக்கான அரசு மருத்துவமனை அமைக்கப்படவில்லை. இங்கே ஆரம்ப சுகாதார நிலையத்தைத் தவிர வேறு மேல் சிகிச்சைக்கு வழியில்லை என்கிறார்கள் தொகுதியின் முப்பிலிவெட்டியின் ஆறுமுகம், சுப்பு போன்றவர்கள்.
தவிக்கும் மக்களின் பிரச்சினை முடிவுக்கு வருமா என்பதே இவர்களின் எதிர்பார்ப்பு.