Skip to main content

மூளைச்சாவு அடைந்தவரின் உடலுறுப்புகள் தானம்; பலருக்கு கிடைத்த மறுவாழ்வு

Published on 31/05/2024 | Edited on 31/05/2024
Organ donation of a passed away person at Trichy Government Hospital

நாமக்கல் மாவட்டம், வரகூரைச் சேர்ந்த 42 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கடந்த 28 ஆம் தேதி நடந்த சாலை விபத்தில் தலையில் அடிபட்டு படுகாயமடைந்தார். இவரை மீட்டு திருச்சி கி.ஆ.பெ.வி அரசு மருத்துவக் கல்லூரியுடன் இணைந்த மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த நபர் மூளைச்சாவு அடைந்தார். இதனை அவரது உறவினர்களிடம் தெரிவித்தபோது, அவர்கள் உறுப்பு தானம் செய்ய முன்வந்தனர்.

இதனையடுத்து மூளைச்சாவு ஏற்பட்டவரின் கல்லீரல், கண்கள், சிறுநீரகங்கள் மற்றும் தோல் ஆகிய உறுப்புகளை தானம் செய்தனர். அரசு வழிகாட்டுதலின்படி, உடல் உறுப்பு வேண்டி பதிவு செய்தவர்களின் முன்னுரிமையின்படி, மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் இரண்டு வருடங்களாகத் தொடர்ச்சியாக இரத்த சுத்திகரிப்பு சிகிச்சை பெற்று வந்த கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 35 வயது நபருக்கு வழங்கப்பட்டது.

இவை தொடர்பான அறுவை சிகிச்சைகள் திருச்சி அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை (மே 30) நடைபெற்றது. மருத்துவமனை முதல்வர் டி. நேரு, தலைமையில் சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் ஜெயபிரகாஷ் நாராயணன் மற்றும் குழுவினர், சிறுநீரக மருத்துவ குழு மருத்துவர் நூர்முகமது மற்றும் குழுவினர், மயக்கவியல் மருத்துவர் சந்திரன் மற்றும் குழுவினர் மற்றும் செவியலியர் குழு, செவிலியர் உதவியாளர் குழு உள்ளிட்டோர் அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டனர். முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் முற்றிலும் இலவசமாக, மாற்று சிறுநீரகம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டு நோயாளி நலமுடன் உள்ளார். இந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையானது திருச்சி, மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 27 ஆவது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு சிறுநீரகம் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவருக்கும், கல்லீரல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவருக்கும், தோல் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது. இரண்டு கண்களும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இருவருக்கும் தானமாக வழங்கப்பட்டுள்ளது. உடலுறுப்புகள் தானம் பெறப்பட்டதையடுத்து உயிரிழந்தவரின் உடலுக்கு திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் குழுவினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி பின்னர் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். உடலுறுப்புகளை வழங்கிய உறவினர்களுக்குப் பயன்பெற்றவர்கள் தரப்பிலும் மருத்துவர்கள் தரப்பிலும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

சார்ந்த செய்திகள்