மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 77- வது பிறந்த நாளை முன்னிட்டு, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி., கட்சியின் மூத்த தலைவர்கள் குலாம்நபி ஆசாத், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அந்த வகையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரூர் தொகுதியின் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "என்போன்ற எந்தவொரு அரசியல் பின்புலமும் இல்லாத, ஒரு சாதாரண குக்கிராமத்தில், எளிய விவசாயக் குடும்பத்தில், தனியொரு பெண்ணால் வளர்க்கப்பட்ட ஒரு பெண், இன்று நாடாளுமன்றத்தில் கோலாய்ச்ச முடிகிறதென்றால், அதற்கு தலைவர் ராஜீவ்காந்தியின் வரலாற்றுச் சாதனையே காரணம்.
ஆண்களின் உலகம் என்று, இன்று வரை உலகளவில், உறுதியோடு நம்பப்படுகிற அரசியலில், பெண்கள் சாதிக்க முடியும் என்று நம்பியவர் ராஜீவ் காந்தி. பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு அளித்து சரித்திரம் படைத்த வரலாற்று நாயகன்.
உள்ளாட்சி அமைப்புகளில் 33% பெண்களுக்கான இட ஒதுக்கீடு தான் என்போன்ற எளிய பெண்களின் தலையெழுத்தை மாற்றி சரித்திரம் படைத்தது. ஒரே ஒரு சட்டத் திருத்தத்தின் மூலம் ஒரே நேரத்தில் 10 லட்சம் பெண்களை அரசியலில் அதிகாரப்படுத்திய வரலாற்று நாயகன் ராஜீவ்காந்தி. எமது தலைவரை நன்றியோடு வணங்குகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.