2021ம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் போது திமுக சார்பில் பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. அதில் ஒன்று மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து எனும் வாக்குறுதி. திமுக வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின், முதலமைச்சராக பொறுப்பேற்ற மே மாதம் 7ம் தேதியே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஐந்து முக்கியமான கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் நகர பேருந்துகளில் மகளிருக்கான கட்டணமில்லா பயணம் என்ற திட்டமும் ஒன்று.
கட்டணமில்லா பேருந்துகளை கண்டறிவதை எளிமையாக்கும் விதமாக தமிழ்நாடு அரசு கட்டணமில்லா பேருந்துகளை அடையாளம் காட்ட அதன் முகப்புகளில் ’பிங்க்’ நிற வண்ணத்தை அடிக்க முடிவு செய்தது. அதன்படி முதற்கட்டமாக 60 பேருந்துகளின் முகப்பில் பிங்க் நிறம் பூசப்பட்டது. இந்தப் பேருந்துகளை சென்னை சேப்பாக்கம் எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார். பேருந்தின் முன் மற்றும் பின் பக்கம் மட்டும் பிங்க் நிறம் பூசப்பட்டதால் பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டது. இந்நிலையில் சாதாரண கட்டணம் கொண்ட பேருந்துகளை முழுமையாக பிங்க் நிறத்தில் மாற்ற மாநகர போக்குவரத்து கழகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன்படி சாதாரண கட்டணம் கொண்ட 1,559 பேருந்துகள் முழுமையாக பிங்க் நிறத்திற்கு மாற்றப்பட்டு இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.