
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தனது இல்லத்தில் கட்சி தொண்டர்களையும் தனது ஆதரவாளர்களையும் தொடர்ச்சியாக ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து வருகிறார். கட்சி ஒன்றிணைய வேண்டும் என விரும்புவதாகத் தொடர்ச்சியாக வலியுறுத்தும் அவர், நேற்று நடந்த கூட்டத்தில் 'கட்சி கூட்டங்களில் நான் பேச ஆரம்பித்தால் யாரும் எதிரில் பேசமுடியாது. அத்தனை விஷயங்கள் என்னிடம் உள்ளது' எனக் கூறியுள்ளார்.
மேலும் நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பின், தான் உட்பட 10 அமைச்சர்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு கட்சிப்பணிக்கு செல்வோம் என கூறியதை யாரும் கேட்கவில்லை என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தேனி பெரியகுளத்தில் தன வீட்டில் தொண்டர்களைச் சந்தித்த அவர், "மிகப் பெரிய தோல்வியை நாம் சந்தித்தோம். நாடாளுமன்றத்தேர்தலில் 38 இடங்களில் போட்டியிட்டு ஒரு இடத்தில் தான் நாம் வெற்றி பெற்றோம். அப்பொழுது நான் என்ன கூறினேன், நான் உட்பட 10 அமைச்சர்கள் பதவியை ராஜினாமா செய்யலாம். ஆளுக்கு நான்கு முதல் ஐந்து மாவட்டங்களைப் பிரித்துக்கொள்ளலாம். மாவட்டங்களுக்குப் போய் கட்சி வேலைகளைப் பார்க்கலாம். சட்ட மன்றத்தில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்று மீண்டும் ஆளும் கட்சியாக அ.தி.மு.க.வை கொண்டு வருவோம் எனத் தலைமை கழகத்தில் கூறினேன். யார் முன்வருவார்கள்? கூட்டத்தில் நான் பேச ஆரம்பித்தால் யாரும் பேச முடியாது. பதவி ஆசை எனக்கு கிடையாது" எனக் கூறியுள்ளார்.