கரோனா நோய்த் தொற்று காரணமாகப் பல மாதங்களாக வகுப்புகள் நடைபெறாமல், பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. பின்னர் 2020- 21ஆம் கல்வியாண்டில் ஆன்லைன் மூலமும், கல்வித் தொலைக்காட்சி மூலமும் ஆசிரியர்கள் பாடம் நடத்தினர். ஜனவரி மாதம் வகுப்புகள் தொடங்கப்பட்ட நிலையில் கரோனா இரண்டாவது அலை பரவத்தொடங்கியது. 1 முதல் 12ஆம் வகுப்பு வரை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. அரசு அமல்படுத்திய கடும் கட்டுப்பாடுகள் காரணமாக கரோனா, தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. எனவே 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்தது.
இதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை கல்வி மாவட்டத்திற்குட்பட்ட திருநாவலூர் அரசினர் மேல்நிலைப் பள்ளி இன்று திறக்கப்பட்டது. பல மாதங்களுக்குப் பிறகு ஆசிரியர்களையும் மாணவர்களையும் பார்க்கும் ஆவலில், மிகுந்த மகிழ்ச்சியுடன் மாணவ மாணவிகள் வந்திருந்தனர். அனைவரையும் ஆசிரியர்கள் உற்சாகமாக வரவேற்றனர். பள்ளி நுழைவு வாயிலில் அனைவருக்கும் சோப்பு திரவம் பயன்படுத்தி கைகளைத் தண்ணீரில் கழுவி, கிருமிநாசினி மருந்து மூலம் கைகளைச் சுத்தப்படுத்தி, உடல் வெப்ப நிலையைப் பரிசோதித்து பின்னர் வகுப்பிற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் என்ற அடிப்படையில் அமரவைத்து, சுத்தம் சார்ந்த உறுதிமொழி எடுக்கப்பட்டு வகுப்புகள் நடந்தது. பள்ளியின் தலைமை ஆசிரியை கே.இளங்கோதை, பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர்கள் அருள்பணி, சத்தியமூர்த்தி, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ராஜசேகரன், திருநாவலூர் ஆரம்பச் சுகாதார மருத்துவ குழுவின் மருத்துவர் ஷகீனா, மருந்தாளுநர் ராமன், உடற்கல்வி ஆசிரியர் அன்பு சோழன் மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பல்வேறு சுகாதாரம் மற்றும் உளவியல் சம்பந்தப்பட்ட அறிவுரைகள் வழங்கினார்கள்.
திருநாவலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வ கணேஷ், வட்டார கல்வி அலுவலர் செல்வராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் பள்ளியைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.