புதுக்கோட்டை மாவட்டத்தில் மத்திய அரசு நிதியை அப்படியே முழுங்கும் பணிகள் நடந்து வருவதை ஒவ்வொன்றாக படங்களுடன் பட்டியலிட்டு நக்கீரன் இணையத்தில் விரிவான செய்திகளை வெளியிட்டு வருகிறோம்.
அந்த வகையில்தான் பொன்னமராவதி ஒன்றியத்தில் மத்திய அரசு நிதி உதவியில் செய்யப்பட்ட பணிகள் செவலுர் விலக்கு சாலை பாலம், ஒலியமங்கலம் வழியாக செல்லும் சாலை, ஒலியமங்கலம், அன்னக்காரன் குளம் தடுப்புச் சுவர் அத்தனையும் படுமோசமாக இருப்பதையும் முழுக்க முழுக்க மணலால் மட்டுமே கட்டி சாதனை படைத்துள்ளனர். என்பதை அதிகாரிகளின் துணையுடன் அத்தனை நிதியும் களவாடப்பட்டிருப்பதை கடந்த சிலநாட்களாக தொடர்ந்து செய்திகள் வெளியிட்டிருந்தோம்.
இந்தநிலையில்தான் 8 ந் தேதி சனிக்கிழமை மாலை.. மணலில் மட்டுமே கட்டப்பட்ட குளத்தின் தடுப்புச்சுவர். ஊரகவளர்ச்சித்துறை அதிகாரிகளின் அடுத்தபடைப்பு. சாதனை மேல் சாதனை. என்ற தலைப்பில் ஒலியமங்கலம் குளத்தின் தடுப்புச் சுவர் கட்டப்பட்டுள்ளதை படங்களுடன் வெளியிட்டோம். இந்த செய்தியில் மாவட்ட ஆட்சியர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை அந்த கிராம இளைஞர்கள் சொன்னதையும் எழுதியிருந்தோம்.
இந்த செய்தி புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்திற்கும் பொன்னமராவதி ஒன்றிய அதிகாரிகளுக்கும் ஏதோ தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். அதனால் ஞாயிற்றுக் கிழமை ஒரு லாரியில் மணலும், சிமெண்ட மூட்டைகளுடனும் வந்த 10 பேர் கையோடு கொண்டு வந்திருந்த துடைப்பத்தால் சுவர்களை துடைக்க மணல் சுவர் கொட்டியது. அதன் பிறகு வேகமாக கலவை போட்டு அதே தரமில்லாமல் கட்டப்பட்டுள்ள மண் சுவரில் மறுபடியும் சிமெண்ட் கலவையை பூசி மறைக்கும் பணியில் மாலை வரை ஈடுபட்டனர்.
இதனைப் பார்த்த கிராம இளைஞர்கள் அந்த பணியாளர்களிடம் கேட்க நாங்க வேலைக்கு வந்தவங்க தான். கான்ட்ராக்டர் இல்லை என்று பதில் சொல்லிவிட்டு பணியை தொடங்கினார்கள். அதன் பிறகும் குளியல்துறைக்கு படிக்கட்டுகள் மற்றும் தடுப்புசுவர்களின் உள்ள கான்கிரீட்டில் உள்ள கற்களை இளைஞர்கள் கையால் தொடும் போதே கையோடு வந்தது. இப்படி காங்கிரீட் போட்டுவிட்டு அதன் மேல் சிமெண்ட் பூசினால் மழைக்காலத்தில் யார் தலையில் விழுந்து யார் சாவது என்று இளைஞர்கள் கேட்க அதற்கு யாரும் பதில் சொல்லவில்லை.
மக்கள் வரிப்பணத்தை மத்திய அரசாங்கம் மக்கள் பணிக்காக அனுப்பினால் அந்தப் பணத்தில் மக்களை கொல்லும் தரமற்ற வேலைகளை செய்துவிட்டு மொத்த பணத்தையும் சுருட்டும் அதிகாரிகள், ஒப்பந்தக்காரர்களின் குடும்பங்கள் எப்படி நிம்மதியாக வாழ முடியும் என்று வயிறு எரிய சொல்லிவிட்டு சென்றனர் இளைஞர்கள். மேலும் இந்த சுவரை மாவட்ட ஆட்சியர் நேரடியாக பார்த்து தரமானது தான் என்று சொன்னால் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என்றனர். மனச்சாட்சி உள்ள அதிகாரிகளும், ஒப்பந்தக்காரர்களும் இப்படி ஒரு வேலை செய்யமாட்டார்கள்.