ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்து தற்கொலை செய்துகொண்டவர்கள் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக மும்பையைச் சேர்ந்த ஆன்லைன் விளையாட்டுகளை நடத்தி வரும் நிறுவனத்திடம் சில ஆவணங்களையும், விளக்கத்தையும் கேட்டு போலீஸ் தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது. இந்த நோட்டீசை ரத்து செய்யக்கோரி மும்பையைச் சேர்ந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டு நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு நேற்று வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆன்லைன் சூதாட்டத்தில் பலியானவர்கள் தொடர்பாக 4 வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. அதனால் இது தொடர்பாக விரிவாக பதில்மனு தாக்கல் செய்ய காலஅவகாசம் வேண்டும் என்று கூறினார்.
மேலும் நிறுவனத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பதில்மனு தாக்கல் செய்வதற்கு காலஅவகாசம் வழங்குவதற்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை. ஆனால், விசாரணை என்ற பெயரில் ஆன்லைன் விளையாட்டு நிறுவனத்தை போலீசார் துன்புறுத்துவது போன்ற கடுமையான நடவடிக்கைகளை எடுக்கக்கூடாது எனக் கூறினார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி வழக்கு விசாரணையை வரும் 28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்ததுடன், ஆன்லைன் நிறுவனத்திற்கு எதிராக எவ்விதக் கடுமையான நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என போலீசாருக்கு உத்தரவிட்டார்.