கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, தமிழகத்திற்கு வெங்காயம் வரத்து குறைந்துள்ளது. இதனால் வெங்காயத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. வெங்காய விலை உயர்வால் நடுத்தர, ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், வெங்காயத்தின் விலையைக் குறைக்கும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, மத்திய அரசு வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கான தளர்வுகளை அறிவித்துள்ளது. அதேபோல் தமிழக அரசும், சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் 'பண்ணை பசுமை' அங்காடிகள் மூலம் ரூபாய் 45-க்கு ஒரு கிலோ பெரிய வெங்காயத்தை விற்பனை செய்து வருகிறது.
இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், "பெரியாரே வந்தாலும் இனி வெங்காயம் என வையார். விண்ணில் பறக்கும் வெங்காய விலை பார்த்து நம் அன்னைமார்களும் இனி சமையலில் அதை வையார். விலையிறங்குவாயா வெங்காயமே?" என்று குறிப்பிட்டுள்ளார்.