கரோனாவால் பாதிக்கப்பட்ட பழம்பெரும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் (வயது 92) காலமான நிலையில் இறுதி மரியாதை நிகழ்வு தற்பொழுது துவங்கியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் கரோனா பாதிப்பு காரணமாக, அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பழம்பெரும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர், சுமார் ஒரு மாதமாகச் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்த நிலையில், இன்று (06/02/2022) காலை 08.12 மணிக்கு மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது.
தமிழில் மிகச் சில பாடல்களையே பாடியிருந்தாலும் தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் லதா மங்கேஷ்கர். குறிப்பாக கமல்ஹாசன் நடிப்பில், இசையமைப்பாளர் இளையராஜாவின் இசையில் வெளியான 'சத்யா' என்ற திரைப்படத்தில் 'வளையோசை கலகலகலவென' என்ற பாடல் தமிழ் ரசிகர்களிடையே அவருக்கு நீங்காத இடத்தைப் பெற்றுத் தந்தது.
இந்நிலையில் லதா மங்கேஷ்கர் மறைவிற்கு இளையராஜா தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அதில், 'தெய்வீகக் காந்தர்வ குரலால் மக்களையெல்லாம் மயக்கி தன்வசம் வைத்திருந்தவர் லதா மங்கேஷ்கர். பாரத ரத்னா லதா மங்கேஷ்கரின் மறைவு என் மனதில் ஆழ்ந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. மங்கேஷ்கரின் மறைவைப் பேரிழப்பாக கருதுகிறேன்'' என தெரிவித்துள்ளார்.