இந்தியை திணிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து தி.மு.க. இளைஞர் அணி மற்றும் மாணவரணி சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில இளைஞரணி செயலாளர் எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அதேபோல் திண்டுக்கல் கிழக்கு, மேற்கு மாவட்டத்தில் இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே இருக்கும் தபால் துறை அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்டச் செயலாளரும் பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் தலைமை தாங்கினார். இதில் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன், மாவட்டத் துணைச் செயலாளர் நாகராஜன், மாநில வர்த்தக அணி செயலாளர் ஜெயன், மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், அவைத்தலைவர்கள் காமாட்சி, மோகன், மாநகர பகுதி செயலாளர்களான ராஜேந்திரகுமார், ஜானகிராமன், அக்கு, சந்திரசேகர், பொருளாளர் சரவணன் மற்றும் இளைஞரணி, மாணவரணி, மகளிரணி பொறுப்பாளர்கள் உள்பட மூன்றாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு இந்திய திணிக்கும் மத்திய அரசை கண்டித்து கண்டன குரல் எழுப்பினார்கள்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் பேசுகையில், ''இந்தியாவில் 22 மொழிகள் உள்ளது அப்படி இருக்கும் போது ஒரு மொழியை மட்டும் பேசு என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம். இது சர்வாதிகார போக்கை கடைபிடிக்கிறது. இந்தியாவில் உள்ள 140 கோடி மக்களுக்குதான் உங்களை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். அதனால் மனசாட்சி படி நடந்து கொள்ள வேண்டும். இந்தி பேசாதே படிக்காதே என்று நாங்கள் சொல்லவில்லை. இந்தி படியுங்கள் அதோடு எத்தனை மொழி வேண்டுமானாலும் படிக்கலாம் ஆனால் இந்த மொழியை மட்டும் தான் இருக்க வேண்டும் என்று திணிக்கக்கூடாது இந்தியா உருவான காலத்திலிருந்து தமிழ் இருக்கு.
இந்தியாவில் ஒரு லட்சம் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதில் 65 சதவிகிதம் கல்வெட்டுகள் தமிழில் இருக்கிறது. மீதிதான் மற்ற மொழிகளில் இருக்கிறது. 1937இல் ராஜகோபாலாச்சாரியார் முதல்வராக இருந்தபோது பள்ளிகளில் இந்தியை கொண்டு வரவேண்டும் என்று சொன்னார். அதை எதிர்த்து போராட்டம் தொடங்கியது. அதைத்தொடர்ந்து அண்ணா, பெரியார், கலைஞர், ஸ்டாலின் என தொடர்ந்து தற்பொழுது உதயநிதி ஸ்டாலின் வரை எதிர்த்து வருகிறார்கள். மோடியும் அமித்ஷாவும் இதை பரிசீலனை செய்ய வேண்டும். உணர்வுகளுக்கு மதிப்பளித்து மத்திய அரசு இந்த கருத்துக்களை திரும்ப பெற வேண்டும். இந்த ஒன்றிய அரசை கண்டித்து தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. தற்போது கல்வி நிறுவனங்களில் ஆங்கிலம் தான் முன்னிலைப்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் இந்தியை திணிக்க பார்க்கிறார்கள். அதேபோல் போட்டி தேர்விலும் ஆங்கிலத்திற்கு பதில் இந்தியை கொண்டு வர நினைக்கிறார்கள்'' என்றார்.