வேலூர் மாவட்டம் ஆம்பூர் வழியாக கர்நாடகா, கேரளா, கொங்கு பகுதிக்கு ரயில்பாதை செல்கிறது. இந்த பாதையில் ஆம்பூர் அடுத்த சான்றோர்குப்பம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் ரயில் இன்ஜின் அடியில் மூதாட்டி ஒருவர் சிக்கியிருப்பதாகவும், அவரை மீட்க வேண்டுமென ரயில்வே காவல்படையினர், ஆம்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
அந்த தகவலின் அடிப்படையில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சம்பவ இடத்தில் ரயில் இன்ஜின் அடியில் மூதாட்டி ஒருவர் சிக்கி உயிருடன் இருப்பதை கண்டறிந்தனர். ரயிலை முன்னோக்கி செலுத்தினாலோ அல்லது பின்னோக்கி செலுத்தினாலும் மூதாட்டியின் உயிருக்கு ஆபத்து என உணர்ந்தனர்.
யார் இந்த மூதாட்டி, என்ன ஊர், இவரின் பெயர் என்ன ?, குடும்பத்தார் யார் என விசாரித்த காவலர்களிடம், இவர் யாரென்று தெரியாது என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். அவர் இந்தி பேசியுள்ளார். முன்னுக்கு பின் முரணாக பேசியதால் மனநிலை பாதிக்கப்பட்டவரோ என நினைத்து அவரிடம் பேசுவதை விட்டுள்ளனர்.
ரயில்வே தண்டவாளத்தில் நடந்து சென்றுகொண்டிருந்த மூதாட்டி சென்னையில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி ரயில் வருவதை கண்டு அஞ்சி தண்டவாளத்தின் நடுவில் படுத்து கொண்டதாகவும், ரயில் இன்ஜின் ஓட்டுநர் இதனைப்பார்த்துவிட்டு சாதுரியமாக ரயிலை நிறுத்தியதால் ரயிலின் இரண்டாவது பெட்டிக்கு அடியில் அந்த மூதாட்டி காயமின்றி தப்பித்துள்ளார்.
ரயில்வே போலிஸார் தீயணைப்பு துறையினரை உதவிக்கு அழைக்க, அவர்கள் வந்து ஸ்ட்ரெச்சர் மூலமாக இன்ஜினுக்கு அடியில் சென்று அந்த மூதாட்டியை பாதுகாப்பாக ஸ்ட்ரெச்சரில் படுக்கவைத்து வெளியே கொண்டு வந்தனர். அவரை மீட்டு ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்து விட்டு ஆம்பூர் தீயணைப்பு துறை காவலர்கள் தங்கள் இருப்பிடம் திரும்பியதாக தகவல் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட மூதாட்டியிடம் தகவல் பெற்று அவரை சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கலாம் என ரயில்வே போலிஸார் அவரிடம் உரையாடியபடி உள்ளனர்.