கிருஷ்ணகிரியில் போலீசாரைத் தாக்க முயன்ற குற்றவாளியை போலீசார் சுட்டுப் பிடித்து கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆந்திராவைச் சேர்ந்த நாம்தார் உசேன் என்ற குற்றவாளியை விசாரணைக்காக போலீசார் பிடிக்கச் சென்றனர். அப்பொழுது கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் மறைந்திருந்த நாம்தார் உசேன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் போலீசார் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் எஸ்.ஐ. வினோத், தலைமை காவலர் ராமசாமி, காவலர் வெளியரசு ஆகியோர் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்தில் எஸ்.ஐ வினோத் தற்பாதுகாப்புக்காகத் துப்பாக்கியால் சுட்டதில் நாம்தார் உசேனுக்கு காலில் காயம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேபோல் போலீசார் தரப்பில் காயமடைந்த எஸ்.ஐ வினோத் உள்ளிட்ட மூன்று பேரும் ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திராவைச் சேர்ந்த நாம்தார் உசேன் மீது வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.