Skip to main content

நூறுநாள் வேலைத்திட்டத்தில் சம்பளப் பாக்கியை வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்

Published on 21/09/2017 | Edited on 21/09/2017
நூறுநாள் வேலைத்திட்டத்தில் சம்பளப் பாக்கியை
வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்



புதுக்கோட்டை, செப்.20- தேசிய வேலை உறுதித்திட்டத்தில் சம்பளப் பாக்கியை உடனடியாக வழங்க வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வட்டாட்சிய அலுவலகத்தில் புதன்கிழமையன்று மனுக்கொடுத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் 20-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் நூறுநாள் வேலைத்திட்டத்தில் வேலைசெய்த விவசாயத் தொழிலாளர்களுக்கு கடந்த நான்கு மாதத்திற்கும் மேலாக சம்பளம் வழங்கப்படவில்லை. வேலை நாட்களும் மிகக்குறைந்த அளவே வழங்கப்படுகிறது எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தக் குறைபாடுகளை உடனடியாக சரிசெய்ய வலியுறுத்தியும் சம்பளத்தை ரூ.400-ஆக உயர்த்தக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் இணைந்து நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கங்களின் ஒன்றியத் தலைவர்கள் பி.மணி, எஸ்.ரஜினி ஆகியோர் தலைமை வகித்தனர். ஒன்றியச் செயலாளர்கள் பி.வீராச்சாமி, கே.சித்திரைவேல் மற்றும் நிர்வாகிகள் எம்.முத்துச்சாமி, எஸ்.நாராயணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போராட்டத்தை தொடங்கி வைத்து விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஏ.ராமையன் உரையாற்றினார். விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.சங்கர் நிறைவுரையாற்றினார். விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் வி.துரைச்சந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் வி.ரெத்தினவேல், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ஜி.பன்னீர்செல்வம், மாதர் சங்க ஒன்றியச் செயலாளர் கே.சாந்தி உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

-இரா. பகத்சிங்

சார்ந்த செய்திகள்