சேலத்தில், தோழிக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துவிட்டு செவிலியர் பயிற்சி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள வரகூரைச் சேர்ந்தவர் ராஜா. கூலித்தொழிலாளி. இவருடைய மகள் ரம்யா (வயது 21). சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பி.எஸ்சி., நர்சிங் நான்காம் ஆண்டு படித்து வந்தார். இன்னும் மூன்று மாதங்களில் படிப்பை நிறைவு செய்ய இருந்தார்.
இந்நிலையில், ஜூன் 10- ஆம் தேதி மாலை, திடீரென்று அவர் தங்கியிருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையறிந்து, உடன் படித்து வந்த மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்த அஸ்தம்பட்டி காவல்நிலைய காவல்துறையினர், நிகழ்விடம் விரைந்தனர். அவர்கள் சடலத்தை மீட்டு, கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காவல்துறை விசாரணையில், ரம்யாவுக்கு வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடந்து வந்ததும், தாய்மாமன் ஒருவருக்கு அவரை திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததாகவும், அதை அவர் விரும்பவில்லை என்றும் தெரிய வந்துள்ளது.
சம்பவத்தன்று மதியம் ஒரு மணியளவில் ரம்யா, தனது தந்தைக்கு செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதன்பிறகே அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ரம்யா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு, உடன் பணியாற்றி வரும் தோழி ஒருவருக்கு செல்போனில், 'நான் வாழ விரும்பவில்லை. நீங்கள் எல்லோரும் நன்றாக இருங்கள்,' என்று குறுந்தகவல் அனுப்பி உள்ளார்.
ஆனால் தோழியோ, தன்னுடைய செல்போனை தான் தங்கியிருந்த அறையிலேயே வைத்துவிட்டு வேலைக்குச் சென்று விட்டதால் ரம்யா கடைசியாக அனுப்பிய குறுந்தகவலை அவரால் உடனடியாக தெரிந்து கொள்ள முடியவில்லை.
தற்கொலைக்கு, அவருக்காக நடந்து வந்த திருமண ஏற்பாடுகள்தான் காரணமா? அல்லது காதல் தோல்வியா? அல்லது வேறு காரணங்களா? என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.