திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகரில் ஹாகின் பாக் என்கிற பெயரில் கடந்த 20 நாட்களாக இஸ்லாமிய மக்கள் தொடர் போராட்டம் நடத்திவருகின்றனர். இந்தப் போராட்டத்தில் மாநிலத்தின் முக்கிய அரசியல் பிரமுகர்கள் வந்து கலந்துக்கொண்டு மத்திய பாஜக அரசின் நிலைப்பாட்டை கண்டித்து பேசிவிட்டு செல்கின்றனர். இதனை கலைக்க அரசு, காவல்துறை, அமைச்சர் நிலோபர்கபில் பல முயற்சிகளை எடுத்து வருகின்றனர். முதலில் காவல்துறையை வைத்து மிரட்டியவர்கள், பின்பு மின்சாரத்தை தடை செய்தனர்.
இந்நிலையில் மார்ச் 10ந் தேதி காலை வாணியம்பாடியில் உள்ள பெரும்பாலான வீடுகளின் கதவுகளில், சாலைகளில் நின்றுயிருந்த இருசக்கர வாகனங்கள் மற்றும் பொதுயிடங்களில் நாங்கள் சி.ஏ.ஏ, என்.பி.ஆர், என்.ஆர்.சி சட்டத்தை ஆதரிக்கிறோம் என்றும் இங்ஙனம் இந்து முன்னணி, திருப்பத்தூர் மாவட்டம் என்கிற பெயரில் நோட்டீஸ் அச்சடித்து ஒட்டியுள்ளனர். இது வாணியம்பாடி நகரில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் டெல்லியில் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவிற்கு ஆதரவானவர்களுக்கும், எதிரானவர்களுக்கும் இடையே ஏற்பட்ட வன்முறையில் 40 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
அதுபோன்று வாணியம்பாடியில் நடந்துவிடுமோ என இந்து – இஸ்லாமிய நல்லுறவை விரும்புபவர்கள் கவலைப்படுகின்றனர்.