எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடத்தப்பட்ட பொதுக்குழு செல்லாது என ஓபிஎஸ் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் இன்று 11.30 மணிக்கு வெளியிட்ட தீர்ப்பில், 'அதிமுகவில் ஜூன் 23 ஆம் நடந்த பொதுக் குழுவில் இருந்த நிலையே நீடிக்கும். எனவே ஓபிஎஸ், இபிஎஸ் இணைந்து பொதுக்குழுக் கூட்டம் நடத்தவேண்டும். தனிக் கூட்டம் கூடக்கூடாது. பொதுக்குழுவை கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும். இபிஎஸ்-ஐ பொதுச்செயலாளராக தேர்வு செய்தது செல்லாது. பொதுக்குழுவை கூட்டுவதற்கு 30 நாட்களுக்கு முன் நோட்டீஸ் அனுப்ப வேண்டும். ஜூலை 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது' என உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், கே.பி.முனுசாமி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்பொழுது பேசிய கே.பி.முனுசாமி, ''ஜெயலலிதா நடத்தியதைப்போல, எம்ஜிஆர் நடத்தியதை போல இரண்டு பொதுக்குழுக்களும் நடைபெற்றுள்ளது என்று தெரிவித்துக் கொள்கிறேன். ஓபிஎஸ் தரப்பு ஒரு 100 பொதுக்குழு உறுப்பினர்களை வைத்துக்கொண்டு நீதிமன்றம் சென்றுள்ளனர். முழு தீர்ப்பு வெளியான பிறகு தலைமை கழகத்திலிருந்து கருத்து தெரிவிக்கப்படும். இது எங்களுக்கு பின்னடைவு இல்லை'' என்றார்.