கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னிட்டு பல்வேறு இடங்களை மாவட்ட திட்ட கண்காணிப்பாளர் ககன்தீப்சிங்பேடி ஆய்வு செய்தார்.
தமிழக அரசின் முதன்மை செயலாரும், வேளாண்மைத்துறை செயலாருமான ககன்தீப்சிங் பேடி, கடலூர் மாவட்ட ஆட்சியர் வெ. அன்புசெல்வன் முன்னிலையில் நேற்று வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் கடலூர் முதுநகர் சுத்துக்குளம் பகுதி, சிதம்பரம் அருகே உள்ள வீரன்கோவில் திட்டு, பெராம்பட்டு, குமராட்சி அருகே நந்திமங்கலம், வீராணம் ஏரி, காட்டுமன்னார்கோவில் பகுதி, குறிஞ்சிப்பாடி பகுதி ஆகிய இடங்களில் உள்ள நீர்நிலைகள், சாலைகள் மற்றும் கொள்ளிடக்கரை உள்ளிட்டவைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் சிதம்பரம் அருகே வீரன்கோயில்திட்டு என்ற இடத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை குறித்து ஆய்வு செய்வதற்காக தமிழ்நாடு முதலமைச்சரால் கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டு இன்றைய தினம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய வந்துள்ளேன். 2015ம் ஆண்டு பருவ மழையினால் பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் நடப்பாண்டில் வடகிழக்கு பருமழையினால் பாதிப்பு ஏற்படா வண்ணம் இருப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்திற்கு வெள்ள பாதிப்பு பணிகளுக்காக ரூ.140 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இன்றைய தினம் கடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் மற்றும் குறிஞ்சிப்பாடி பகுதியில் உள்ள பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளோம்.
விவசாயிகளுக்கு பயிர் பாதிக்கக்கூடாது என்பதற்காக பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்த்தின் கீழ் பிரிமீயத் தொகையினை நவம்பர் 30க்குள் செலுத்தவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்ட காரணத்தினால் உடனடியாக விவசாயிகள் இப்பயிர் காப்பீட்டு பிரிமீயத்தை செலுத்தினால் நவம்பர்30ம் தேதிக்குள் பயிர்கள் பாதிப்பு ஏற்பட்டால் கணக்கீடு செய்யப்பட்டு உடனடியாக பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். எனவே அக்டோபர்15ம் தேதிக்குள் பயிர் காப்பீட்டுத் தொகையினை செலுத்தவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். 2016-17ல் விவசாயிகள் பெருமளவில் பயிர்காப்பீடு தொகையினை செலுத்தப்பட்டுள்ளார்கள். அதன்மூலம் ரூ.3400 கோடி பயிர் காப்பிட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. தற்போது பொதுப்பணித்துறை மூலம் நடைபெற்று வரும் வெள்ளத்தடுப்பு பணிகள் 72 முதல் 80 சதவிகிதம் முடிவடைந்துள்ளது. சிதம்பரம் பகுதியில் 60 முதல் 70 சதவிகித பணிகள் முடிவடைந்துள்ளது. வீரன்கோவில் திட்டு பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் மழையால்பாதிக்கப்படுகிறது என்று நான் கடலூர் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது இங்கு காங்கீரிட் தடுப்பு அமைக்கப்பட்டது. அதன் அருகிலே இந்த கிராமக்கள் செல்ல சிமண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த காங்கீரிட் தடுப்பால் சாலை பாதுகாக்கப்பட்டுள்ளது. சாலையின் அடுத்தபக்கத்திலும் காங்கீரிட் தடுப்பு அமைத்து வெள்ளபாதிப்பில் நிரந்தர தீர்வு ஏற்பட நடவடிக்கை எடுக்கபடும் என்று கூறினார்.
கடலூர் சார் ஆட்சியர் சரயூ, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் (பொறுப்பு) மகேந்திரன், சிதம்பரம் எம்எல்ஏ பாண்டியன்,சிதம்பரம்வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) வெற்றிவேல்,இணை இயக்குநர் (வேளாண்மை) அண்ணாதுரை, துணை இயக்குநர் (தோட்டக்கலை) ராஜாமணி, சிதம்பரம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அன்பரசு, அணைக்கரை உதவி செயற்பொறியாளர் அருணகிரி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரவிச்சந்திரன்,சிதம்பரம் வட்டாட்சியர் தமிழ்செல்வன் மற்றும் விவசாய சங்க தலைவர் ஸ்ரீதர்வாண்டையார், விவசாய சங்க கூட்டியக்க ரவீந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.