ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட மிஞ்சிய 6 பேரையும் விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் இன்று சென்னையில் நளினி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசுகையில், ''தமிழக அரசுக்கு மிக்க நன்றி. மத்திய அரசுக்கு மிக்க நன்றி. இந்த வழக்கை நடத்துவதற்கு உதவியாக இருந்த தமிழக மக்களுக்கு நன்றி. மக்கள் எங்கள் மீது அன்பைப் பொழிந்து இருக்கிறார்கள் இதுவரைக்கும். அவர்கள் எல்லோருக்கும் மிக்க நன்றி. ஒவ்வொரு தலைவர்களும் அவர்களால் முடிந்த உதவிகளை செய்திருக்கிறார்கள். அவர்கள் எல்லோருக்கும் எனது நன்றி. எனது மகள் ரொம்ப ஆர்வமாக இருக்கிறார். அவருடைய அப்பாவை சந்திக்க வேண்டும் என்று சொல்கிறார். நான் சிறையில் இருந்தேன் என்றுதான் பேரு, ஆனால் எப்போதும் என்னுடைய குழந்தை கூடவும், கணவர் கூடவும் தான் இருந்திருக்கிறேன். அவர்களையேதான் நினைத்துக் கொண்டிருப்பேன் எப்பொழுதும். எனவே அவர்களுடன் வாழ்ந்த மாதிரி ஒரு அனுபவம் இருக்கிறது. அது நிஜத்தில் இப்பொழுது நடக்க வேண்டும். எங்கள் விடுதலைக்காக போராடிய, குரல் கொடுத்த அனைத்து அரசியல் தலைவர்களையும் பார்த்து நன்றி சொல்ல வேண்டும். ஆனால் அதற்கான வாய்ப்பு இருக்குமா என்று எனக்கு தெரியவில்லை. ஹரித்ரா அப்பா கிளம்பினார் என்றால் அவருடன் கிளம்ப வேண்டி இருக்கும்.
எங்களுக்காக உயிர் கொடுத்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் அஞ்சலி செலுத்த வேண்டும். ஜெயலலிதாவின் சமாதிக்கு போக வேண்டும். கலாம் ஐயாவின் சமாதியைப் பார்க்க வேண்டும் என்ற பெரிய ஆசை இருக்கிறது. நான் சிறைக்குச் சென்ற முதல் நாளில் இருந்தே விடுதலை ஆகி விடுவேன் என்ற நம்பிக்கையில் இருந்தேன். ஆனால் நிறைய அடி மேல அடி, இடி மேல் இடி என் தலையில் விழுந்து கொண்டே தான் இருந்தது அதை இல்லை என்று சொல்ல முடியாது. சொல்லப்போனால் என் வாழ்க்கையையே நான் முடித்துக் கொள்ள வேண்டும் என்பதைப் போன்ற சம்பவங்களும், தருணங்களும் சிறைக்குள் நடந்திருக்கிறது. நிறைய அந்த மாதிரியான தருணங்கள் இருந்தாலும் அடுத்த முயற்சி.. அடுத்த முயற்சி.. அடுத்த முயற்சி... என்று என்னுடைய வழக்கறிஞர்கள் என்னை தொடர்ந்து ஆதரித்ததால் என்னுடைய மனதைக் கொஞ்சம் கொஞ்சமாக தேற்றிக்கொண்டு அடுத்த கட்ட நகர்வுக்கு தயாரானேன்.
இந்த வழக்கில் நானும், எனது வீட்டுக்காரரும், அறிவும் முழு முயற்சி எடுத்து செயல்பட்டோம். ஆனால் 26 பேருக்கும் தூக்கு தண்டனை கிடைத்தது. அப்பொழுது எங்களுடைய மனநிலை எப்படி இருந்திருக்கும். அந்த மாதிரி தருணங்கள் நிறைய இருக்கிறது சிறைக்குள். என்னுடைய கணவர் இலங்கை தமிழர் எனவே உலகில் அனைத்து நாடுகளிலிருந்தும் அவருக்கு ஆதரவு கொடுக்கிறார்கள். என்னுடைய கணவரை அகதிகள் முகாமிலிருந்து விடுவித்து என்னுடைய குழந்தையிடம் கொண்டு போய் சேர்த்து விட வேண்டும் என மாநில அரசிடம் கோரிக்கை வைக்கிறேன். தமிழக முதல்வரை சந்திப்பது தொடர்பாக இனிமேல் தான் அவகாசம் கேட்க வேண்டும். ஆனால் பேரறிவாளன் முதல்வரை சந்தித்தபோது நிறைய பிரச்சனைகள் ஏற்பட்டது. அதுபோல் ஏதேனும் ஆகிவிடுமோ என்று அச்சம் இருக்கிறது. என்ன வச்சு அவரை சிக்கலில் சிக்க வைக்க கூடாது யாரும். அந்த ஒரு பயம் இருக்கிறது. இதில் அறிவு கிட்ட இருந்து பாடம் கற்றுக் கொண்டேன். அதனால் நான் தயங்குகிறேன். சோனியா காந்தி, பிரியங்கா காந்தியை பார்க்க தயக்கம் இருக்கிறது. அவர் அவருடைய அப்பாவை இழந்து விட்டார்கள். அந்த வழக்கில்தான் நான் இருக்கிறேன். அப்படி இருக்கும் பொழுது அவர்கள் ரொம்ப வலியில் இருப்பார்கள் அல்லவா அதனால் அவர்களைச் சந்திக்க தயக்கம் இருக்கிறது. அவர்கள் விருப்பப்பட்டார்கள் என்றால் அவர்களை சந்திக்க தயார். பிரியங்கா காந்திக்காக விரதமெல்லாம் இருந்தேன். அவர் என்னை சிறையில் நேரில் சந்தித்து விட்டுச் சென்ற பிறகு அவருக்கு ஏதும் ஆகிவிடக்கூடாது என்பதற்காக'' என்றார்.