வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது தாழ்வு மண்டலமாக மாறி வலுப்பெற்றுள்ளது. இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி இன்று மதியம் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், புயல் எதிர்பார்த்த வேகத்தில் பயணிக்காத காரணத்தால், எங்கே கரையைக் கடக்கும் என்று உறுதியாகத் தெரியாத நிலை ஏற்பட்டது. இதனால், கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், 'நிவர்' புயல் அதிதீவிரப் புயலாக மாறியுள்ளதாகவும், கடலூரில் இருந்து 90 கிலோ மீட்டர் தொலைவில் 'நிவர்' புயல் நிலை கொண்டுள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்தப் புயல் மணிக்கு 16 கிமீ வேகத்தில் பயணித்து கரையை நோக்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நொடிக்கு நொடி 'நிவர்' புயல் பல்வேறு மாற்றங்களைச் சந்தித்து கரையை நோக்கி வேகமாக வந்துகொண்டிருக்கிறது.