'வங்கக்கடலில் உருவான 'நிவர்' புயல் புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. புதுச்சேரி அருகே நேற்றிரவு 11.30 மணி முதல் நள்ளிரவு 02.30 மணி வரை புயல் முழுவதுமாக கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடந்தபோது 120 கி.மீ. முதல் 145 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசியது.
அதி தீவிர 'நிவர்' புயல் புதுச்சேரிக்கு வடக்கே வலுவிழந்து தீவிரப் புயலாக மாறி கரையைக் கடந்தது. 'நிவர்' புயல் கரையைக் கடந்த நிலையில் அடுத்த நான்கு மணி நேரத்தில் புயல் மேலும் வலுவிழக்கும்' என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காலை 08.30 மணி முதல் நள்ளிரவு 02.30 மணி வரை கடலூரில் 24.6 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. அதேபோல், புதுச்சேரி- 23.7 செ.மீ., சென்னை- 8.9 செ.மீ., காரைக்கால்- 8.6 செ.மீ., நாகை- 6.3 செ.மீ., சேத்துப்பட்டு (திருவண்ணாமலை)- 13 செ.மீ., கீழ்பெண்ணாத்தூர்- 12 செ.மீ., வந்தவாசி- 11 செ.மீ., வெம்பாக்கம்- 11 செ.மீ., கலசப்பாக்கம்- 10 செ.மீ., ஜமுனாமரத்தூர்- 9.2 செ.மீ., போளூர்- 8.5 செ.மீ., ஆரணி 8.4 செ.மீ., திருவண்ணாமலை- 7 செ.மீ., மழை பதிவானது.
'நிவர்' புயல் கரையைக் கடந்த நிலையில் கடலூர், விழுப்புரம், புதுச்சேரியில் சாலையில் மரங்கள் முறிந்து விழுந்தன. புதுச்சேரியில் பெய்த அதீத கனமழை காரணமாக பல்வேறு சாலைகளில் வெள்ளம் போல் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வீட்டை மழைநீர் சூழ்ந்துள்ளது.