Skip to main content

'நிவர்' புயல் களத்தில் இடைவிடாத சீரமைப்புப் பணி... சென்னை மாநகராட்சிக்கு குவியும் பாராட்டுகள்!

Published on 28/11/2020 | Edited on 28/11/2020

 

nivar cyclone chennai corporation worker did great job says public


தலைநகர் சென்னையில், 'நிவர்' புயல் தாக்குதலை சமாளிக்க இதுவரை இல்லாத வகையில், பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டன. வானிலை ஆய்வு மையங்களின் அறிவிப்புகளை தொடர்ந்து, நிவர் புயலைச் சமாளிக்க வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் தீவிரப்படுத்துமாறு மாநகராட்சி நிர்வாகத்துக்கு உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவிட்டிருந்தார். 

 

nivar cyclone chennai corporation worker did great job says public


மேலும், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்தி, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணித்தார். வழக்கமாக மழை நீர் தேங்கும் பகுதிகளில் மழை நீரை உடனே எந்திரங்கள் மூலம் அகற்ற வேண்டும், புயல் காற்றில் சாலையில் சாயும் மரங்களை வெட்ட நவீனக் கருவிகளை பயன்படுத்த வேண்டும், தாழ்வான ஆற்றங்கரையோரத்தில் வசிப்பவர்களையும், வீடற்றவர்களையும் மீட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைத்துப் பராமரிக்க வேண்டும் என மாநகராட்சிப் பணியாளர்களுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவிட்டார். 


'புயல்' பாதிப்பு குறித்து பொதுமக்களுக்கு உதவும் வகையில், 24 மணி நேரமும் இயங்கும் மாநகராட்சி கட்டுப்பாட்டு அறை மூலம் கிடைக்கும் தகவல் அடிப்படையில், உடனுக்குடன் களப் பணியாற்றவும் அமைச்சர் வேலுமணி அறிவுறுத்தியிருந்தார். புயல் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 3 வேளையும் அம்மா உணவகங்கள் வழியாக உணவு வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் அமைச்சர் வேலுமணி துரிதப்படுத்தியிருந்தார். இதைத் தொடர்ந்து செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்ட பிறகும், 'நிவர்' புயல் கரையைக் கடக்கும்போதும், கடந்த பிறகும், ஏற்பட்ட பாதிப்புகளைச் சீரமைக்கும் பணியில், சென்னை மாநகராட்சிப் பணியாளர்கள் களைப்பின்றி பணியாற்றி வருகின்றனர்.


முக்கியச் சாலைகள், சுரங்கப் பாதைகளில் தேங்கிய மழை நீரை, நவீன எந்திரங்கள் மூலம் அகற்றினர். சாலைகளில் விழுந்து கிடந்த மரங்களை, நவீனக் கருவிகளால் வெட்டி நள்ளிரவு வரை அப்புறப்படுத்தினர். இதனால், மறுநாள் பல முக்கியச் சாலைகள், சுரங்கப் பாதைகள், வீதிகளில் மழை நீர் வடிந்திருந்தது. மேலும் சாலையில் விழுந்து கிடந்த மரங்கள் உடனுக்குடன் அகற்றப்பட்டு, போக்குவரத்துச் சீரமைக்கப்பட்டது. புயல் கரையைக் கடந்த அன்று நள்ளிரவு வரை களப்பணியாற்றிய சென்னை மாநகராட்சி பணியாளர்கள், மறுநாள் காலை 6 மணி முதல் களத்திற்கு வந்து சீரமைப்புப் பணிகளில் இடைவிடாமல் பணியாற்றி வருகின்றனர். 


பல இடங்களில் பேரிடர் மேலாண்மைத் துறை, மின்சாரத் துறை, வருவாய்த் துறை, சுகாதாரத் துறை, பொதுப்பணித் துறை மற்றும் காவல்துறையுடன் இணைந்து மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். சென்னை மாநகராட்சிப் பணியாளர்களின் களைப்பில்லாத களப்பணியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாராட்டினார். 

 

nivar cyclone chennai corporation worker did great job says public


'நிவர்' புயலின் தாக்கம் அதிகமாக இருந்தபோதிலும் பேரிடர் காலத்தில் மக்களின் நலன் கருதி துரிதமாகவும், அற்பணிப்புடனும் பணியாற்றும் மாநகராட்சிப் பணியாளர்கள் அனைவரையும் என் சிரம் தாழ்ந்து வணங்குகிறேன் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தார். 
 

சென்னை மாநகராட்சியின் துரிதப் பணியைப் பாராட்டும் நெட்டிசன்,
 

nivar cyclone chennai corporation worker did great job says public

 

cnc

 

இதே போல், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் சென்னை மாநகராட்சி பணியாளர்கள் அனைவருக்கும் பாராட்டுத் தெரிவித்தார். மேலும், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் அனைவரும், சென்னை மாநகராட்சியின் 'நிவர்' புயல் பாதிப்புகளைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்குப் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர். சென்னை மாநகராட்சியின் திட்டமிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் நவீன எந்திரங்கள், கருவிகளுடன் சீரமைப்புப் பணியில் அர்ப்பணிப்புடன் இடைவிடாது ஈடுபட்ட நடவடிக்கைகளுக்கு சமூக வலைதளங்களிலிலும் நேரிலும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

 

 

 

சார்ந்த செய்திகள்