கொடநாடு கொலை- கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சயான் மற்றும் மனோஜ் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்கள் மீதான தீர்ப்பை, சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.
கொடநாடு எஸ்டேட் பங்களாவில் கடந்த 2017- ஆம் ஆண்டு நுழைந்த மர்ம கும்பல், அங்கிருந்த காவலாளியைக் கொலை செய்துவிட்டு, கொள்ளையில் ஈடுபட்டது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீஸார், சயான், மனோஜ் உள்ளிட்ட 11 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு, நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சயான் மற்றும் மனோஜ், ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன், இந்த வழக்கில் தொடர்புடைய நான்கு சாட்சிகளை மிரட்டியுள்ள இவர்களை ஜாமீனில் விடுவித்தால், அரசு தரப்பின் மற்ற சாட்சிகளையும் மிரட்டக்கூடும். தற்போது நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில், இந்த வழக்கின் விசாரணை துரிதமாக நடைபெற்று வருகிறது. மூன்று மாதத்தில் வழக்கு விசாரித்து முடிக்கப்பட உள்ள நிலையில், இருவருக்கும் ஜாமீன் வழங்க வேண்டியதற்கான அவசியம் ஏதுமில்லை என வாதிட்டார்.
சயான், மனோஜ் மற்றும் காவல்துறை தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி ஆர்.சுப்பிரமணியன், இருவரின் ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.