தமிழகத்தில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் பல்வேறு தளர்வுகளையும் தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன்படி நவம்பர் 10ஆம் தேதி முதல் 50 சதவிகித இருக்கைகளுடன் திரையரங்குகள் திறக்கப்படும் எனத் தமிழக அரசு சமீபத்தில் அறிவித்து இருந்தது. மேலும், தற்பொழுது தீபாவளி பண்டிகை சமயம் என்பதால் புதிய திரைப்படங்கள் திரையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் இடையே நடந்த பேச்சுவார்த்தையில், எந்த உடன்பாடும் எட்டப்படாததால் தீபாவளியன்று திரைப்படங்கள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வி.பி.எஃப் கட்டணம் தொடர்பாக தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
வி.பி.எஃப் கட்டணம் செலுத்த திரையரங்க உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள் என இரு தரப்பும் மறுப்பதால் இந்த இழுபறி நீடித்துள்ளது. தமிழ்ப் படங்களை வெளியிட்டால் பிறமொழிப் படங்களை வெளியிடுவோம் எனத் தியேட்டர் உரிமையாளர்கள் உறுதியளித்துள்ளனர்.