தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் என்கிற அக்பர் இப்ராஹிம். இவரின் மனைவி அய்யம்மாள். இவர் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார்.
அய்யம்மாள் தன் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக தனது இரண்டு குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று வழக்கம் போல், அய்யம்மாள் பணி முடிந்து இரவு 7 மணி அளவில் தனது வீட்டிற்கு செல்ல மருத்துவமனை விட்டு வெளியே வந்துள்ளார். அங்கு அவரது கணவர் பாலசுப்பிரமணியன் மனைவிக்காக காத்திருந்துள்ளார்.
அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. அப்போது அக்பர் இப்ராஹிம், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தியுள்ளார். இதில் நிலைகுலைந்து அய்யம்மாள் கீழே விழுந்து துடித்துள்ளார். மேலும் அக்பர் இப்ராஹிம், அய்யம்மாள் மீது பெட்ரோல் ஊற்றி அவருக்கு தீவைத்துள்ளார். இதில் அய்யம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். மனைவிக்கு தீவைத்துவிட்டு அங்கிருந்து அக்பர் இப்ராஹிம் தப்பிவிட்டார். சம்பவம் குறித்து கேள்விப்பட்ட நெல்லை மாநகர காவல்துறை துணை கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமையிலான போலீஸார் அங்கு வந்து அய்யம்மாள் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், அவரது கணவர் அக்பர் இப்ராஹிம் மீது வழக்குப் பதிவு செய்து அவரை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் அக்பர் இப்ராஹிம், கோவில்பட்டி கிழக்கு காவல்நிலையத்தில் காவல் ஆய்வாளர் வனசுந்தர் முன்னிலையில் சரண் அடைந்தார். அதனைத் தொடர்ந்து போலீஸார் அவரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.