உயர்நீதிமன்றத் தடை உத்தரவையும் மீறி குளத்தில் சவுடு மண் அள்ளிய ஜே.சி.பி. மற்றும் மணல் லாரிகளைப் பொது மக்களே லாரிளைப் பிடித்து சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். ஆற்று மணலோ அல்லது குளத்தில் சவுடு மணலோ அள்ளக் கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தனது வரம்பிற்குட்பட்ட 13 மாவட்டங்களுக்கு தடை உத்தரவு பிறப்பித்ததுடன், அவற்றைச் சம்பந்தப்பட்ட மாவட்டக் கலெக்டர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

நெல்லை மாநகர் பகுதிக்குட்பட்ட தென்காசிச் சாலையிலிருக்கும் பழையபேட்டை காந்தி நகரின் பக்கமுள்ள பம்பன் குளத்தில் சட்டத்தை மீறி இரவு நேரங்களில் பொக்லைன் உதவியோடு டிப்பர் லாரிகளில் சுமார் 100 லோடுக்கும் அதிகமான சவுடு மண் கள்ளத்தனமாக அள்ளப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் சவுடு மண் அள்ளுவதற்குத் தரப்பட்ட அனுமதியை ஏற்கனவே உயர்நீதிமன்றம் ரத்து செய்திருந்தது. இந்திலையில் தனியார் ஒப்பந்தப்பணிகளுக்காக அள்ளப்படும் செம்மண் பயன்பாடு பற்றி அறிந்த ஊர் பொதுமக்கள் திரண்டு வந்து மணல் அள்ளிய பொக்லைன், மற்றும் லாரிகளைச் சிறைப் பிடித்து, கண்டியப்பேரி வி.ஏ.ஓ, மற்றும் நெல்லை வருவாய் ஆய்வாளர் முன்னிலையில் போலீசில் ஒப்படைத்தனர்.

இந்த சம்பவத்தில் முறைகேடாக திருட்டு மணல் அள்ளியவர்களுக்கு உடந்தையாக இருந்த வருவாய்த் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகராட்சியின் முன்னாள் கவுன்சிலர் சுடலைக்கண்ணு மற்றும் தொடர்புடைய ஊர் பொதுமக்கள் கலெக்டருக்குப் புகார் மனு கொடுத்துள்ளனர்.ஆனாலும் மணல் திருட்டுக்கள் வளர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.