தமிழ்நாடு முழுவதும் ஏரி, குளங்களில் வண்டல் மண் எடுக்கத் தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு பல வரைமுறைகளையும் வகுத்துள்ளது. ஆனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசின் சட்ட திட்டங்களுக்கு மதிப்பளிக்காமல் அதிகாரிகள் பணத்திற்காக பல்வேறு குளத்திலும் மண் அள்ள அனுமதி அளித்துள்ளனர். இதனால் பல்வேறு இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இது போன்ற மரண குழிகள் தோண்டுவதைக் கரையில் நின்று வேடிக்கை பார்த்துவிட்டுச் சென்றதன் விளைவு இன்று 2 குழந்தைகளின் உயிர்களைப் பறித்திருக்கிறது. அதே சமயம் குழிகள் தோண்டுவோரிடம் போன் பே, ஜி பே மூலமும் கண்காணிப்பு அலுவலர்கள் பணம் வாங்கி குவித்திருப்பதும் வேதனையானது. இது தொடர்பாக முழுமையாக விசாரணை செய்தால் அதிகாரிகள் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது. இப்படி மரணகுழிகள் தோண்டுவதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று கிராமத்தினர் அதிகாரிகளிடம் சொன்னாலும் பயனில்லை.
கீரனூர் அருகே உள்ள களமாவூர் அருகில் உள்ள கண்ணக்கோன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி கனகா. இந்த தம்பதியர் 4 பெண் குழந்தைகளுடன் தங்கள் தோட்டத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்கள். ரவிச்சந்திரன் கீரனூர் பகுதியில் கட்டும் புதிய வீட்டிற்கான காங்கிரீட் போடும் பணி இன்று காலை தொடங்க உள்ள நிலையில் கனகா தனது மூத்தமகள் காயத்திரி (வயது 14) மற்றும் 3வது மகள் கவிஸ்ரீ (வயது 4) ஆகிய இருவரையும் தங்கள் ஊரில் உள்ள காளியம்மன் கோயிலுக்குச் சென்று விளக்கு ஏற்றிவிட்டு வரச் சொல்லி அனுப்பியுள்ளார். இரு குழந்தைகளும் காளியம்மன் கோயிலுக்கு கலக்குளம் கரை வழியாகக் குளத்திற்குள் இறங்கிச் சென்றுள்ளனர். வழக்கமாகச் செல்லும் பாதை என்பதால் குழந்தைகள் அதில் இறங்கிச் சென்றுள்ளனர். ஆனால் பாதையுள்ள பகுதியிலும் மண் அள்ளியவர்கள் ஆழமாகத் தோண்டி வைத்திருப்பதை அறியாமல் குழந்தைகள் சென்று மரண குழிகளுக்குள் மூழ்கியுள்ளனர்.
வீட்டு வேலை நன்றாக நடக்க வேண்டும் என்பதற்காகக் காளியம்மன் கோயிலுக்கு விளக்கு ஏற்றச் சென்ற தன் குழந்தைகள் நீண்ட நேரமாகக் காணவில்லை என்று தன் கணவருக்குத் தகவல் கூறியுள்ளார் கனகா. கீரனூரில் இருந்த ரவிச்சந்திரன் உடனே வீடு திரும்பியவர் அக்கம் பக்கத்தினருடன் காளியம்மன் கோயிலுக்குச் செல்லும் வழியில் தேடிச் சென்றனர். அப்போது கலக்குளத்தில் கவிஸ்ரீ மிதப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து தேடும் போது காயத்திரியும் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டு கீரனூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்குப் பரிசோதித்த மருத்துவர்கள் இரு குழந்தைகளும் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறியதும் கதறித் துடித்துள்ளனர். தொடர்ந்து பிரேதப் பரிசோதனைக்காகப் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தங்கள் குழந்தைகளுக்காக புது வீடு கட்டி காங்கிரீட் போடும் நேரத்தில் அம்மனுக்கு விளக்கு ஏற்றச் சென்ற இரு குழந்தைகளும் மரணகுழி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரவிய நிலையில் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. ஒவ்வொரு கிராமத்திலும் ஏரி, குளங்களில் தோண்டப்பட்டுள்ள மரண குழிகள் உள்ள பகுதிகளில் எச்சரிக்கை பதாகை வைத்து மனித உயிர்களைக் காப்பாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.