நீட் தேர்வு அச்சத்தில் நம்பிக்கை இழந்து பயத்தில் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகள் ஒருபுறம் அதிகரித்து வரும் நிலையில், அவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் 68 வயதில் நீட் தேர்வு எழுதி அசத்தியிருக்கிறார் முன்னாள் அரசு அதிகாரி.
நாடு முழுவதும் நேற்று நீட் தேர்வு நடைபெற்ற நிலையில், தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில் மொத்தமாக எட்டு தேர்வு மையங்கள் நீட் தேர்வுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் நீட் தேர்வை எழுதினர். அதில் திருவாரூர் மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட ராமலிங்கம் (வயது 68) என்பவர் தஞ்சை வல்லத்தில் உள்ள பிரிஸ்ட் பல்கலைக்கழகத்தில் நீட் தேர்வு எழுதினார். ஏற்கனவே அரசின் கூட்டுறவுத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ராமலிங்கம் இது குறித்து கூறுகையில், ''மருத்துவராக வேண்டும் என்பது எனது சிறு வயது கனவு. நிச்சயமாக வெற்றி பெற்று மருத்துவராகி விடுவேன். நீட் தேர்வால் மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொள்வது வேதனை அளிக்கிறது. அவர்களுக்கு என்னைப் போன்றவர்கள் தன்னம்பிக்கை அளிக்க வேண்டும் என்பதற்காகவும் நீட் தேர்வு எழுதினேன்'' என்று தெரிவித்தார்.