சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள கூழையூரில் நீட் நுழைவுத் தேர்வு எழுதவிருந்த மாணவர் தனுஷ் (வயது 19) தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இரண்டு முறை தேர்ச்சி பெற முடியாத நிலையில், மூன்றாவது முறையாக தேர்வு எழுதவிருந்த நிலையில் மாணவர் தற்கொலை செய்துக் கொண்டார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர், சம்பவ பகுதிக்கு சென்று மாணவரின் உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மாணவர் தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "மாணவ, மாணவிகள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்வது சரியான முடிவாக இருக்காது. குறுகிய காலம் என்பதால் நீட் தேர்வுக்கு விலக்கு பெற முடியவில்லை. நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு செய்து வருகிறது" எனத் தெரிவித்தார்.
நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று (12/09/2021) பிற்பகல் 02.00 மணிக்கு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.