
நீதிபதி ஏ.கே.ராஜன் குழு நியமனத்தை எதிர்த்து பா.ஜ.க பொதுச்செயலாளர் தாக்கல் செய்த வழக்கில் தங்களையும் இணைத்து கொள்ள கோரி, திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்துள்ளன. நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆய்வு செய்ய உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஒன்பது பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக பா.ஜ.க பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் தங்களையும் இணைக்க கோரி திமுக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளும், திராவிடர் கழக தலைவர் வீரமணி, பொது பள்ளி நடைமுறைக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு ஆகியோர் இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
அந்த மனுக்களில், தமிழகத்தில் 1984ம் ஆண்டு முதல் அமலில் இருந்த நுழைவுத்தேர்வு, 2006ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது எனவும், அதை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சட்டமன்றத்தில் மனுதாரரின் கட்சி உறுப்பினர், நீட் தேர்வை எதிர்ப்பதாகக் கூறியுள்ளதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நீட் தேர்வின் சாதக, பாதகங்களை ஆராய குழு மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த குழு இன்னும் தனது அறிக்கையை அரசுக்கு அளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழு அறிக்கை அளிக்கும்பட்சத்தில் அதன் மீது தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பது தெரியாமல், முன் கூட்டியே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், அரசியல் சாசன வரம்புக்கும், அதிகாரத்துக்கும் உட்பட்டு தான், தமிழக அரசு இக்குழுவை அமைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
தமிழக மக்களின் ஆட்சேபங்கள் மற்றும் சட்டமன்றத்தின் விருப்பத்துக்கு முரணாக நீட் தேர்வு திணிக்கப்பட்டுள்ளதாகவும், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கும், இந்த வழக்குக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மட்டுமே குழு அமைத்துள்ளதாகவும், குழுவை நியமிக்கும் மாநில அரசின் அதிகாரத்தை உச்ச நீதிமன்ற உத்தரவு கட்டுப்படுத்தவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர். இந்த மனுக்கள், தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில், கரு நாகராஜன் தொடர்ந்த வழக்குடன் வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வர உள்ளன.