நவோதயாப் பள்ளித் திணிப்பு..!
தமிழ்த்தேசியப் பேரியக்கம் கண்டனம்
நவோதயாப் பள்ளித் திணிப்பு பிரச்சனை தொடர்பான தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர்தோழர் கி. வெங்கட்ராமன் சிறப்புக் கட்டுரை!
‘’நீட் தேர்வு திணிப்பைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் மீது, இப்போது நவோதயா பள்ளி திணிக்கப்படுகிறது.
“குமரி மகாசபை” என்ற அமைப்பைச் சேர்ந்த நாகர்கோவில் செயக்குமார் தாமஸ் என்பவர் தொடுத்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை அமர்வு நீதிபதிகள் சசிதரன் மற்றும் சாமிநாதன் ஆகியோர் 11.09.2017 அன்று அளித்த தீர்ப்பின் வழியாக, இந்த நவோதயா பள்ளித் திணிப்பு நடக்கிறது.
இரண்டு மாதத்திற்குள் தமிழ்நாடு அரசு, நவோதயா பள்ளிகளை தமிழ்நாட்டில் நிறுவ ஏற்பு வழங்கி, அதற்கான பணிகளைத் தொடங்க வேண்டுமென இத்தீர்ப்பு ஆணையிடுகிறது.
இராசீவ் காந்தி ஆட்சிக் காலத்தில் 1986இல் அவர் அறிவித்த “புதிய கல்விக் கொள்கை” திட்டப்படி, மாவட்டத்திற்கு ஒரு நவோதயா பள்ளி நிறுவப்பட வேண்டும். இராசீவ் காந்தி ஆட்சி, அறிவித்த புதிய கல்விக் கொள்கையையும் நவோதயா பள்ளித் திட்டத்தையும், அறிவிப்பு நிலையிலேயே நமது இயக்கம் எதிர்த்தது.
நமது மாணவர் அமைப்பின் சார்பில், “புதிய கல்விக் கொள்கையை முறியடிப்போம்” (எழுதியவர் - கி. வெங்கட்ராமன்) என்ற சிறு வெளியீடு வெளியிடப்பட்டது. காஞ்சிபுரம், சிதம்பரம், தஞ்சை, பட்டுக்கோட்டை ஆகிய இடங்களில் இராசீவ் காந்தியின் புதியக் கல்விக் கொள்கையும், நவோதயா பள்ளித் திட்டத்தையும் எதிர்த்து கருத்தரங்கம், பேரணி, ஆர்ப்பாட்டம் ஆகியவை நடத்தப்பட்டன.
அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஜி.ஆர்., இராசீவ் காந்தி ஆட்சியின் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டார். ஆனால், நவோதயா பள்ளிகளை மட்டும் அதன் வழியாக இந்தித் திணிக்கப்படுகிறது என்ற காரணத்தினால் எதிர்த்தார். எனவே, தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் அமைக்கப்படவில்லை.
உயர் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்று, தமிழ்நாட்டில் நவோதயா பள்ளி தொடங்க வேண்டும் என்று காங்கிரசுக் கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவர் க. திருநாவுக்கரசர் உள்ளிட்ட சிலர் கூறுகின்றனர். எளிய மக்களுக்குத் தரமான கல்வி கிடைக்கும் என்பதால் நவோதயா பள்ளிகளை தமிழ்நாட்டில் திறக்க வேண்டுமென அவர்கள் வாதிடுகின்றனர்.
நவோதயா பள்ளிகளில் ஆறாம் வகுப்பிலிருந்து பன்னிரெண்டாம் வகுப்பு வரை இருக்கும். இப்பள்ளி உண்டு உறைவிடப் பள்ளியாகும். இப்பள்ளிகளில் 75 விழுக்காடு கிராமப்புற மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர் என்பதும், விடுதி, உணவு, சீருடை, கல்விக்கான துணைக் கருவிகள் அனைத்தும் கட்டணமின்றி வழங்கப்படுகின்றன என்பதும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இடஒதுக்கீடு இல்லை என்ற போதிலும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பு மாணவர்களுக்கு - அவர்களுடைய மக்கள் தொகை விகிதத்தைவிடக் கூடுதலாக இடம் வழங்கப்படுகின்றது என்பதும், அதில் 33 விழுக்காடு பெண்களுக்கு இடம் வழங்கப்படுகிறது என்பதும் உண்மையே!
மாவட்டத்திற்கு ஒரு பள்ளி என்ற வகையில் நவோதயா பள்ளிக்கு, ஒரு பள்ளிக்கு 30 ஏக்கர் நிலத்தையும் தொடக்க நிலைக் கட்டுமானங்களையும் தொடர்புடைய மாநில அரசு வழங்க வேண்டும். ஒரு மாணவருக்கு சராசரியாக ஆண்டுக்கு 85,000 ரூபாய் செலவிடப்படுகிறது.
“புதிய கல்விக் கொள்கை” என்ற பெயரால் 1986இல் இராசீவ் காந்தி ஆட்சி, நவோதயா பள்ளியைத் திணித்த போது இருந்ததைவிட, தமிழ்நாட்டுக் கல்விச் சூழல் படுமோசமாகக் கெட்டுப் போய்விட்டதால் திருநாவுக்கரசர் போன்றவர்களால், சி.பி.எஸ்.இ. பள்ளிகளை தனியார் துறையில் அனுமதித்த தமிழ்நாடு அரசு, அரசுத்துறையில் இந்திய அரசு நிதி உதவியோடு நவோதயா பள்ளிகளைத் தொடங்கினால் என்ன என்று கேள்வி கேட்க வைக்கிறது.
திருநாவுக்கரசர் போன்றோர் சொல்லுவது போல், ஆறாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை நவோதயா பள்ளிகளில் தமிழ் ஒரு மொழிப்பாடமாக புதுச்சேரியில் இருக்கிறது என்பது உண்மையே!
இவ்வளவுக்குப் பிறகும், தமிழ்த்தேசியப் பேரியக்கம் இப்போதும் நவோதயா பள்ளி தமிழ்நாட்டில் அனுமதிக்கப்படக் கூடாது என்று கூறுகிறது. இதற்கு சமூக நிலையிலும், அரசியல் நிலையிலும் முகாமையான காரணங்கள் இருக்கின்றன!
அடுக்கடுக்கான தீமைகளுக்கு அடிமைப்பட்டு பழகிப் போன மனநிலையிலிருந்து பார்த்தால், நவோதயா பள்ளிகளை அனுமதிக்கலாம் என்று தோன்றக்கூடும். ஆனால், இப்பள்ளி முறை என்ன என்பதை புரிந்து கொண்டால்தான், இது குறித்து சரியான முடிவுக்கு வர முடியும்!
இப்பள்ளிகளில் படிக்கிற - படித்த மாணவர்கள், எளிய பின்னணியிலிருந்து வந்து மேல் நிலைக்கு வந்திருப்பதை வைத்து தனிநபர்கள் ஆதரித்ததைப் பின்பற்றி, கல்வியாளர்களும் மக்கள் இயக்கங்களும் அதே முடிவுக்கு வர முடியாது!
இந்திய - தமிழ்நாடு அரசுகளின் கல்விச் செயல்பாடுகள் என்ன? அவற்றை கண்ணை மூடிக் கொண்டு சகித்துக் கொள்ளும் மக்களின் மனநிலை என்ன?
கள்ளச்சாராயம் பெருகுகிறதா? அரசே டாஸ்மாக் கடைகளை நடத்தலாம். கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியாது!
தமிழ்வழிக் கல்வியைப் புறந்தள்ளி மழலையர் பள்ளி முதல் உயர் வகுப்பு வரை தமிழே கற்பிக்காமல் ஆங்கில வழிப்பள்ளிகள் தனியார் துறையில் புற்றீசல் போல் புறப்பட்டு விட்டதா? அவற்றைத் தடை செய்ய வேண்டாம் - மாறாக தமிழ்நாடு அரசே, அரசுப் பள்ளிகளில் முதல் வகுப்பிலிருந்தே ஆங்கில வழிப் பிரிவுகளைத் தொடங்கிவிடலாம்!
பல இலட்சக்கணக்கில் பணம் கட்டி படிக்க வேண்டிய நிலை இருக்கிறதா, அதைத் தடுக்க வேண்டாம் - மாறாக கொள்ளை கொள்ளையாகக் கட்டணம் கட்டுவதற்கு சிலருக்காவது வங்கிகளில் வங்கிக்கடன் கொடுத்தால் போதும்!
அதேபோல், கட்டணக் கொள்ளையிடும் தனியார் பள்ளியைச் சுற்றி வாழும் எளிய மக்களுக்கு 25 விழுக்காடு இடம் கொடுக்குமாறு ஆணையிட்டால் போதும்! அதுகூட சரிவர நடக்கிறதா என்று பார்க்கக்கூட வேண்டியதில்லை!
அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைகிறதா, அப்பள்ளிகளின் கட்டமைப்பையும் ஆசிரியர் எண்ணிக்கையையும் அவர்களது கற்பித்தல் நடவடிக்கைகளையும் திருத்த வேண்டாம். அரசுப் பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைத்துவிட்டால் போதும்!
அரசு மருத்துவமனை போதிய வசதியின்றி இருக்கிறதா, கூடுதல் நிதி ஒதுக்கி அதை சரி செய்ய வேண்டாம் - அரசு மருத்துவமனைகளை தனியாரிடம் கொடுத்துவிடலாம்!
ஏழை எளிய மக்களுக்கு உயிர் காக்கும் மருத்துவம் இலவசமாகக் கிடைக்கவில்லையா, அரசாங்கமே காப்பீட்டு நிறுவனங்களின் வழியாக கொள்ளைக் கட்டணம் வாங்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு நிதி வழங்கி நோயாளிகளை அங்கே அனுப்பிவிடலாம்!
தமிழ்நாடு பாடத்திட்டம் பின்தங்கி இருக்கிறதா, அதை சரி செய்ய வேண்டாம் - அதற்கு பதிலாக சி.பி.எஸ்.இ. பள்ளிகளை “கல்வித்தரம்” என்ற பெயரால் தனியாருக்குத் திறந்து விடலாம்!
இதுதான் அரசின் அணுகுமுறை! இதற்குப் பழகிவிட்ட மக்களில் கணிசமானோர் மனநிலையும், இதற்கு இசைவாகவே இருகக்கிறது!
இந்த மனநிலையுள்ளவர்கள் பல்லாயிரம் கட்டணம் கட்டி சி.பி.எஸ்.இ. தனியார் பள்ளிகளில் படிப்பதைவிட, அதே கல்வியை கட்டணமின்றி நவோதயா உண்டு உறைவிடப் பள்ளியில் படிப்பதில் என்ன தவறு என்று கருதக் கூடும்! தலைக்கு மேல் வெள்ளம் போயாயிற்று, இதில் சாண் என்ன முழம் என்ன?’’ என்ற மனநிலையே இது!
தனிநபர்கள், பெற்றோர்கள் இவ்வாறு இருப்பது புரிந்து கொள்ளக் கூடியதே. ஆனால், பொறுப்புள்ள கல்வியாளர்களும் மக்கள் இயக்கங்களும் இதே முடிவில் இன்னொரு சீரழிவை ஏற்க முடியாது!
நவோதயா பள்ளியை அறிமுக நிலையிலேயே 1986இல் தமிழ்த்தேசியப் பேரியக்கம் எதிர்த்ததற்கான காரணம், முகாமையாக மூன்று!
ஒன்று, தமிழ்நாடு மாநில அரசின் பள்ளிக் கல்வி உரிமையை பறித்து, மாநிலப் பாடத்திட்டத்திற்கு மாறாக இந்திய அரசின் நடுவண் பள்ளிக் கல்வி வாரியப் பாடத்திட்டம் (சி.பி.எஸ்.இ.) திணிக்கப்படுகிறது. இந்தியா முழுவதற்கும் ஒற்றைப் பாடத்திட்டம் என்பது, தேசிய இனத் தனித்தன்மையை மறுப்பது, அந்தந்த மாநிலத் தனித்தன்மைக்கு ஏற்ப பாடத்திட்டங்கள் வகுக்கும் அறிவியல் வழிப்பட்ட முறையை மறுப்பது, அந்தந்த மாநிலங்களின் வரலாற்றுத் தனித்தன்மையை மறைப்பது, பள்ளிக் கல்வியில் மாநில உரிமையைப் பறிப்பது.
இரண்டாவது, அனைத்து மாணவர்களுக்கும் ஒரே சீரான கல்வி வாய்ப்பை வழங்குவதற்கு மாறாக, ஒரு சிலரை மட்டுமே தேர்ந்தெடுத்து வழங்குவது என்பது நவோதயா பள்ளியின் அறிவிக்கப்பட்ட கொள்கையாகும்.
ஐந்தாம் வகுப்புத் தேறிய மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு வைத்து, நவோதயா பள்ளியின் தொடக்க வகுப்பான ஆறாம் வகுப்புக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த போட்டித் தேர்வு, அனைந்திந்தியத் தேர்வு - சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின்படி நடக்கும் தேர்வு!
ஒரு மாவட்டத்திற்கு ஒரு நவோதயா பள்ளி, ஒவ்வொரு பள்ளிக்கும் 80 மாணவர்கள் என்ற வகையிலேயே ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்யப்படுகிறார்கள். இப்போட்டி நுழைவுத் தேர்வில், தேர்வு எழுதுவோரில் இரண்டு விழுக்காடு, சரியாகச் சொல்லப் போனால் 1.86 விழுக்காடு மாணவர்களே தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இத்தேர்வுகளின் கேள்வித் தாள்கள், ஐந்தாம் வகுப்பு முடித்து வரக்கூடிய பின்தங்கிய மாணவர்கள் எழுதும் வகையில் இல்லை என்பதையும், ஏற்கெனவே சராசரிக்கும் மேல் மதிப்பெண் பெறக்கூடிய ஆற்றல் உள்ள மாணவர்களே இதில் இடம்பிடிக்க முடிகிறது என்பதையும், அனைவருக்கும் ஒரு சீரான கல்வி என்ற நோக்கத்திற்கு - இது எதிராக இருக்கிறது என்பதையும், “நிதி ஆயோக்” அமைப்பின் 2015ஆம் ஆண்டு ஆய்வறிக்கையே தெளிவுபடுத்துகிறது.
ஒரு பள்ளியில் நுழையும்போதே மாணவர் களிடையே பாகுபாடு காட்டுவது, தேர்ந்தெடுக்கப்படாத மாணவர்களிடம் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும். ஒவ்வொரு பொதுத் தேர்வு முடிவிலும் நடக்கும் மாணவர் தற்கொலைகள் இதற்குச் சான்று!
இப்போதே எல்.கே.ஜி.யில் சேர வரும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு நேர்காணல் நடத்தி, படித்த பெற்றோர்களின் பிள்ளைகளையே பள்ளியில் சேர்க்கும் நடைமுறை தரமான பள்ளிகள் என்று போற்றப்படும் பல தனியார் பள்ளிகளில் நடப்பதைப் பார்க்கிறோம். இவ்வாறான வடிகட்டல் முறையே நவோதயா பள்ளியின் நுழைவுத் தேர்வு முறையாகும்!
இவ்வாறு மாணவர்களிடையே தரம் பிரிப்பது, கல்விச் சூழலைக் கெடுக்கும் என்பதால்தான் கல்வியாளர்கள் பலரும் இதனை எதிர்க்கிறார்கள்.
கல்வியாளர்களின் தொடர் வலியுறுத்தல்களுக்குப் பிறகு 10ஆம் வகுப்பு மற்றும் மேனிலைப் பள்ளித் தேர்வுகளில் மதிப்பெண் முறைக்குப் பதிலாக கிரேடு முறை கொண்டு வந்திருப்பதன் நோக்கமும் அதுதான்! நவோதயா பள்ளியின் நுழைவுத் தேர்வு முறை, சமூக அறிவியலுக்கு முரணானது!
ஒரு மாவட்டத்திற்கு ஒரு நவோதயா பள்ளி, ஒரு பள்ளிக்கு 20 கோடி ரூபாய். அப்படி 32 மாவட்டங்களுக்கும் 640 கோடி ரூபாய் கிடைக்கும் வாய்ப்பை, தமிழ்நாடு அரசு விட்டுவிடக் கூடாதென்று திருநாவுக்கரசர் அறிவுரை கூறுகிறார். இந்த 640 கோடி ரூபாயை, அனைத்துப் பள்ளிகளுக்கும் பரவலாக வழங்கி, அனைத்துப் பின்தங்கிய மாணவர்களும் பயன் பெறுவதற்கு வழி செய்ய வேண்டுமென அவருக்குத் தோன்றவில்லை!
நவோதயா பள்ளியில் ஒரு மாணவருக்கு 85,000 ரூபாய் செலவிடப்படுகிறது எனும்போது, இது உண்டுறைப் பள்ளி என்று காரணம் சொல்லலாம்! உண்டு உறைவிடம் தவிர, பிற கல்விச் செலவு என்ன என்பதை அறிய இந்திய அரசின் கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளின் செலவைப் பார்த்தால் புரியும்!
இந்திய அரசு நடத்துகிற கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளில், சராசரியாக ஒரு மாணவருக்கு ரூபாய் 27,000 செலவிடப்படுவதாக இந்திய அரசின் புள்ளி விளக்கங்களே கூறுகின்றன. அதே நேரம் தமிழ்நாடு அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒரு மாணவருக்கு செலவிடப்படும் தொகை சராசரியாக 13,000 ரூபாய் ஆகும்.
இந்திய அரசின் நவோதயா பள்ளிகளுக்கும், கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளுக்கும் வழங்கும் தொகையையும் சேர்த்து, மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கு வழங்கினால் பல இலட்சம் தமிழ்நாட்டு ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறுவார்கள்!
மாவட்டத்திற்கு 80 பேருக்கு மட்டுமே “சிறந்த கல்வி” என்ற பாகுபாட்டுக் கொள்கையை மக்கள் மீது அக்கறையுள்ள எந்தக் கல்வியாளரும் ஏற்க முடியாது. ஏற்கெனவே, அதிகக் கட்டணம் பெறும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் இருக்கின்றன என்ற காரணத்தைக் காட்டி, இதனை ஞாயப்படுத்திவிட முடியாது!
நவோதயா பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பு மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ள போதும், தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் சற்றொப்ப 75 விழுக்காடு கொண்ட பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு - அவர்களுக்குரிய இட ஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை. இது பெரும் சமூக அநீதியாகும்!
மூன்றாவது, இயல்பாகவே நவோதயா பள்ளிகளும் ஆங்கிலத் திணிப்பு - இந்தித் திணிப்பு மையங்களாகும். ஆறாம் வகுப்பிலிருந்து பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலும் இப்பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்பும, இந்தி வழி வகுப்பும் மட்டுமே உண்டு.
இப்பள்ளிகளில் ஆறிலிருந்து பத்து வரை தமிழ்நாட்டில் ஒரு மொழிப்பாடமாக மட்டுமே தமிழைப் படிக்கலாம்.
பதினொன்று, பன்னிரெண்டு வகுப்புகளில் இந்தி விருப்பப்பாடம்! ஆயினும், நடைமுறையில் இந்திக்கு சலுகை வழங்குகிறபோது, இந்தியைப் பாடமாக எடுத்துப் படிக்க வேண்டிய நிலை ஏற்படும்! தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் நிலையைப் பார்த்தால், இந்த உண்மை புரியும்!
நீட் தேர்வை எதிர்க்க உறுதியற்ற அரசு, நீட் தேர்வுக்கு அரசாங்கமே பயிற்சி மையம் நடத்தும் என்று சொல்வதுபோல், தமிழ்வழிக்கல்வியைக் கட்டாயமாக்க உறுதியற்று - ஆங்கில வழிக்கல்வியை அரசுப் பள்ளிகளிலும் கொண்டு வருவோம் என்று சொல்வது போல், உயர் நீதிமன்றம் சொல்லிவிட்டது, ஏற்கெனவே இங்கு சி.பி.எஸ்.இ. பள்ளிகள் அதிகமிருக்கின்றன, ஏற்கெனவே 45 கேந்திரிய வித்தியாலயா பள்ளிகள் இயங்கி வருகின்றன என்று காரணம் கூறி நவோதயா பள்ளிகளை அனுமதிக்கக் கூடாது!
நான்காவதாக, சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் இந்தியோடு சமற்கிருதத்தையும் - ஆரியப் பண்பாட்டையும் திணிக்கும் மோடியின் பா.ச.க. அரசு, “தேசிய ஒருமைப்பாடு” என்ற பெயரால், சமற்கிருதத்தையும் ஆரியப் புராணக் கதைகளையும் உறுதியாகத் திணிக்கும்!
சாரணர் இயக்கத்திலேயே ஆர்.எஸ்.எஸ்.சின் எச். இராசாவை திணிக்க முற்படுகிறார்கள் என்றால், நவோதயா பள்ளிகளின் விடுதிகள் ஆர்.எஸ்.எஸ். பாசறைகளாக மாற்றப்படும் என்பதை உணர்ந்து கொள்ள முடியும்!
வேறு மாநிலங்களில் நடக்கிறதோ இல்லையோ, தமிழினத்தின் மீது, தமிழினப் பண்பாட்டின் மீது தீராப்பகை கொண்ட ஆரியத்துவம் நவோதயா பள்ளிகளை தங்கள் திட்டத்திற்கான வாய்ப்பாகக் கருதிக் கொண்டு செயல்படும்!
இராசீவ்காந்தி ஆட்சிக் காலத்திற்குப் பிறகு, கல்வித்துறையில் தமிழ்நாடு பெற்றிருக்கிற பட்டறிவை வைத்துப் பார்த்தால், 1986இல் நவோதயா புகுத்தப்பட்ட காலத்தைவிட முப்பதாண்டுக்குப் பிறகு அப்பள்ளித் திட்டத்தை இப்போது எதிர்ப்பதற்கு பல மடங்கு ஞாயங்கள் உள்ளன.
நீட் தேர்வு திரும்பப் பெறாமல் நீடிக்குமானால், அது இன்னும் பல அனைத்திந்திய நுழைவுத் தேர்வுகளுக்கு வழி திறந்துவிடும். அவ்வாறான சூழலில், மாநிலப் பாடத்திட்டம் என்பதே முற்றிலும் புறந்தள்ளப்பட்டு, அனைத்துப் பள்ளிகளும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை நோக்கியே விரட்டப்படும்.
அனைத்து மாணவர்களும் நீட் மற்றும் அதைப் போன்ற அனைத்திந்திய நுழைவுத் தேர்வுகளை நோக்கியே விரட்டப்படுவார்கள். அனைத்துப் பள்ளிகளும் இந்த அனைத்திந்திய நுழைவுத் தேர்வுக்கான தயாரிப்புப் பள்ளிகளாக சீரழிந்துவிடும். நவோதயா பள்ளி, அவ்வாறான கருவிகளில் மிக வலுவான கருவியாக இந்திய அரசின் கைகளில் கிடைக்கும்!
ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுக்கும் இணை அதிகாரம் வழங்கும் “பொதுப் பட்டியல்” என்ற நிலையிலிருந்து, கல்வி அதிகாரம் முற்றிலும் இந்திய அரசின் கைகளுக்கு மாற்றப்பட்டு வரும் இக்காலத்தில், நவோதயா பள்ளி இதற்கு மேலும் ஒரு வலு சேர்க்கும் அடக்குமுறைக் கருவியாக மாறும்!
தமிழ்நாட்டில் தமிழ்வழிக் கல்வி என்பதே மருந்துக்கும் இல்லாமல் அழிந்துவிடும்! தமிழ்நாட்டு இளையோர் வரலாறற்றவர்களாக மாற்றப்படுவார்கள். தமிழ்ச் சமூகம் - ஒரு இனம் என்ற நிலையிலிருந்து உதிரிக் கூட்டமாக மாற்றப்படுவதற்கு கல்வித்துறை ஒரு கருவியாக பயன்படும்.
இனியும் மூழ்குவதற்குள் கல்வி அதிகாரத்தை, மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வா என்ற முழக்கத்தை முன்னெடுக்க வேண்டிய இக்கட்டத்தில், இந்திய அரசின் நவோதயா பள்ளியை தமிழ்நாட்டில் அனுமதிப்பது இன்னொரு தற்கொலை முயற்சியாகவே இருக்கும்.
நீட் தேர்வை எதிர்த்த ஆர்ப்பாட்டங்களில் கல்வி அதிகாரதத்தை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வா என்று முழக்கமிடும் திருநாவுக்கரசர் போன்றோர், இந்திய அரசின் நவோதயா பள்ளியை தமிழ்நாட்டில் அனுமதிக்க வேண்டும் எனக் கோருவது கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதம் ஆகும்!
எனவே, தமிழ்நாட்டுக் கல்வி உரிமையின் மீது அக்கறை உள்ளவர்களும், தமிழ்வழிக் கல்வியே தமிழ்நாட்டு மாணவர்களின் அறிவை வளர்க்கும் என்ற அறிவியலைப் புரிந்தவர்களும், அனைவருக்கும் கல்வி ஏற்றத்தாழ்வின்றி கிடைக்க வேண்டும் என்ற சமூக நீதியில் அக்கறை உள்ளவர்களும் ஒன்றிணைந்து, நவோதயா பள்ளித் திட்டத்தை தமிழ்நாட்டில் நுழையாமல் தடுக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளைத் தீர்ப்பை செயல்படுத்தக் கூடாது. டாஸ்மாக் சிக்கலிலும், வேறு பல மக்கள் பகைத் திட்டங்களிலும் அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட முடியாது என்று ஒதுங்கிக் கொள்ளும் நீதித்துறை, நவோதயா பள்ளியில் மட்டும் கெடுவிதித்துத் தாண்டி குதிப்பது முரணானது!
எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் விரட்டியடிக்கப் பட்ட நவோதயா பள்ளிகளை, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு கொண்டாடும் எடப்பாடி பழனிச்சாமி அரசு, தமிழ்நாட்டில் அனுமதிக்கக் கூடாது.’’