
பிரதமர் நரேந்திர மோடி அரசு முறைப் பயணமாக அமெரிக்கா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கு 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி ஜூன் 20 முதல் ஜூன் 23 வரை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மோடி தற்போது எகிப்து நாட்டிற்குச் சென்றுள்ளார்.
இந்நிலையில் மோடியின் அமெரிக்க பயணம் குறித்து கனிமொழி எம்.பி.யிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இது குறித்து அவர் பேசுகையில், “தமிழக ஆளுநர் ஒரு சில நாட்களுக்கு முன்னர் ஒரு கருத்தை தெரிவித்தார். அதில் ‘இங்குள்ள அடிப்படை விசயங்களை சரி செய்யவில்லை என்றால் வெளிநாட்டிற்கு சென்று பேசி எந்த பயனும் இல்லை’ என்று சொன்னார்.
அதனை நான் மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன். இங்கு இருக்கக்கூடிய சாதி, மத வேற்றுமைகள், காழ்ப்புணர்ச்சிகள், நாடு பற்றி எறிந்து கொண்டிருக்கிற சூழலில் இதை எல்லாம் சரி செய்யவில்லை என்றால் இதில் எந்தப் பயனும் இல்லை என்று நான் சொல்லவில்லை ஆளுநரே சொல்லி இருக்கிறார்” என்றார்.